பொதுவாக உடல்நிலை சரியில்லாதவர்களை பார்க்கச் செல்லும்போது சாத்துக்குடி வாங்கிச் செல்வது வழக்கம். ஆம், உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் ஆற்றல் சாத்துக்குடிக்கு உள்ளது. சாத்துக்குடியை பழமாக சாப்பிடுவது சற்றுக் கடினம். ஆனால், அதை சாறு பிழிந்து குடிப்பது எளிது. இந்தோனேசியாவிலிருந்து சீனா வரையுள்ள பகுதிகளே சாத்துக்குடி தோன்றிய இடம் என்று முதலில் நம்பப்பட்டது. 2004ம் ஆண்டு வெளியான ஓர் அறிக்கை, மேகலாயா மற்றும் நாகலாந்தின் மலைப்பகுதிகளே சாத்துக்குடி தோன்றிய இடம் என்று கூறுகிறது.
சாத்துக்குடியின் நன்மைகள்
வைட்டமின் சி சத்து
உடல் செயல்பாட்டுக்கு அத்தியாவசிய தேவையானது வைட்டமின் சி. உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை காப்பதில் வைட்டமின் சி முக்கிய பங்கு வகிக்கிறது. இது நீரில் கரையக்கூடிய வைட்டமினாகும். ஆனால், நம் உடல் சேர்த்து வைக்க இயலாத சத்து இது. ஆகவே, அன்றாடம் சாப்பிடும் உணவிலிருந்து உடல் இதை பெற்றுக்கொள்ளவேண்டும். அதற்கு சாத்துக்குடி ஏற்றதாகும்.
நச்சு அகற்றுதல்
உடலில் சேரும் நச்சுத்தன்மை கொண்ட பொருள்களை அகற்றும் இயல்பு சாத்துக்குடிக்கு உள்ளது. உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுப்பொருள்கள் தங்கியிருந்தால் அவற்றை முழுவதும் வெளியேற்றி உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
நோய் எதிர்ப்பு ஆற்றல்
சாத்துக்குடியில் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களான ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் ஏராளம் உள்ளன. இவை உடலில் அழற்சியை தடுக்கின்றன. உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை முறைப்படுத்துகின்றன. நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பை குறைக்கின்றன.
சாதாரண சளி
சாத்துக்குடியில் உள்ள வைட்டமின் சி, அடிக்கடி சளித்தொல்லை ஏற்படாமல் தடுக்கிறது.
செரிமானம்
சாத்துக்குடியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆகவே, செரிமானத்தை முறைப்படுத்துகிறது. மலச்சிக்கலை தடுக்கிறது; மலம் வெளியேற துணைபுரிகிறது.
ஈறுகளில் இரத்தக் கசிவு
வைட்டமின் சி சத்து குறைந்தால் ஸ்கர்வி என்ற நோய் ஏற்படும். ஈறுகளில் இரத்தக் கசிவு, அசதி, சருமத்தில் பிரச்னை ஆகியவை ஸ்கர்வி நோயின் அறிகுறிகள். சாத்துக்குடியில் உள்ள வைட்டமின் சி, இக்குறைபாட்டினை தடுக்கிறது.
விளையாட்டு வீரர்கள்
தடகள வீரர்களுக்கு ஏற்றதாக சாத்துக்குடி ஜூஸ் பரிந்துரைக்கப்படுகிறது. அதிக களைப்பான பயிற்சிக்குப் பிறகு உடலுக்கு நீர்ச்சத்தை அளிக்கிறது. தசை பிடிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.
எலும்பு ஆரோக்கியம்
முடக்கு வாதம் உள்ளிட்ட எலும்பு சம்மந்தப்பட்ட குறைபாடுகளை சாத்துக்குடி தடுத்து, எலும்பு ஆரோக்கியத்தை பேணுகிறது.
கண் புரை
சாத்துக்குடியில் உள்ள ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் மற்றும் அதன் பூஞ்சை எதிராக செயல்படும் திறன் கண்களில் தொற்று ஏற்படாமல் தடுக்கிறது. கண் புரை உருவாவதையும் சாத்துக்குடி தடுக்கிறது.