ஓர் எளிய உணவு. அதில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இது எது என்று கண்டுபிடிக்க முடிகிறதா? பெரும்பாலானோர் இதை மறந்திருப்பர். அநேகர் இதில் என்ன நன்மை இருக்கக்கூடும் என்று கருதி அலட்சியம் செய்திருக்கலாம். ஆம்! பச்சை பயிறுதான் அந்த உணவு. சிறுபயிறு, பச்சை பயிறு என்று அறியப்படும் சிறிய பச்சை நிற பயிறில் ஏராளமான சத்துகள் அடங்கியுள்ளன.
இரத்த சிவப்பணுவுக்கும் கர்ப்பிணிகளுக்கும்
சிறுபயிறு என்னும் பச்சை பயிற்றில் ஃபோலிக் அமிலம் என்னும் வைட்டமின் பி9 அதிக அளவில் உள்ளது. ஃபோலேட் சத்து என்று அறியப்படும் இது நம் உடல் புதிதாக செல்களை உருவாக்குதலிலும் செல் பராமரிப்பிலும் உதவுகிறது. குறிப்பாக இரத்த சிவப்பணு உற்பத்தியில் ஃபோலேட் முக்கிய பங்கு வகிக்கிறது. கருத்தரிக்கும் பெண்களுக்கு ஃபோலேட் சத்து இன்றியமையாததாகும். கருத்தரித்தலை எதிர்நோக்கும் பெண்கள் ஃபோலேட் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடவேண்டும். கருவில் சிசுவின் வளர்ச்சிக்கு வைட்டமின் பி9 (ஃபோலேட்) அவசியம்.
பெண்களின் இதயம்
ஃப்ரீ ராடிகல்ஸ் என்னும் நிலையற்ற அணுக்கள் இரத்த அணுக்களுக்கு ஏற்படுத்தக்கூடிய சேதத்தை குறைக்கக்கூடிய ஃப்ளவனாய்டுகள் என்னும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் (ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள்) பச்சை பயிற்றில் அதிகம் உள்ளன. இந்த ஃப்ளவனாய்டுகள் இரத்தம் சீராக ஓடுவதற்கு உதவுகிறது. இவை வைட்டமின் பி தொகுப்பு சத்துகளோடு இணைந்து இதய துடிப்பினை இயல்பு நிலையில் பராமரிக்கிறது. இதய நோய்கள் மூலம் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை பச்சை பயிற்றில் உள்ள மெக்னீசியம் குறைக்கிறது. குறிப்பாக பெண்கள் இதய நோயின் மூலம் உயிரிழப்பதை தடுக்கிறது. பித்தநீர் வெளியேறுவதை அதிகரித்து கொலஸ்ட்ராலின் அளவையும் இது குறைக்கிறது.
செல் பாதுகாப்பு
சிறுபயிறில் புரதம் அதிக அளவில் உள்ளது. புது செல் உருவாக்கம், எலும்பு வலிமை, இரத்த நிறமியாகிய ஹீமோகுளோபின், சேதமுற்ற செல் பராமரிப்பு இவற்றுக்கு புரதம் அதிக அளவில் தேவை.
உடல் எடை
பச்சை பயிறு, குறைந்த அளவு கொழுப்பு மற்றும் அதிக அளவு புரதம், நார்ச்சத்து இவற்றைக் கொண்டது. சிறு பயிறு சாப்பிட்டால் வயிற்றில் திருப்தியான உணர்வு இருக்கும். ஆகவே நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவது குறையும். கொழுப்பு சேர்வதை தடுக்கும் வகையில் குளூக்கோஸ் மற்றும் லிபிடுகள் வளர்சிதை மாற்றத்தை இப்பயிறு தூண்டும்.
இரத்த அழுத்தம்
எல்டிஎல் என்னும் கெட்ட கொழுப்பு ஆக்ஸிஜனேற்றம் அடைவதை பச்சை பயிறு தடுக்கிறது. ஆகவே, இரத்த தமனிகளில் கொழுப்பு படிவதை தடுத்து இரத்த ஓட்டத்தை அதிகமாக்குகிறது. பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் சோடியத்தின் வினையை குறைத்து இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கும் பணியை செய்கிறது.
ஹார்மோன்கள்
பாசி பயிறில் உள்ள துத்தநாகம் (ஸிங்க்) நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. சருமத்திற்கு நன்மை செய்கிறது. ஆண்களில் டெஸ்டோஸ்டீரான் மற்றும் பெண்களுக்கு சினைப்பையிலிருந்து கருமுட்டைகளை வெளியேற்ற காரணமான ஹார்மோன் ஆகியவை அதிகமாக சுரக்க இது உதவுகிறது.