உலகமெங்கும் கோடிக்கணக்கானோர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப் தற்போது ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமானதாக உள்ளது.நிறுவனத்தின் தனியுரிமை கொள்கைகளை மாற்றியுள்ளதாகவும் அவற்றை ஒப்புக்கொள்ளாதவர்களின் கணக்குகள் அழிக்கப்படும் என்றும் வாட்ஸ்அப் பயனர்களுக்கு அறிவிக்கை அனுப்பியது. நிறுவனத்தின் இணையதளத்திலும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி பிப்ரவரி 8ம் தேதி முதல் மாற்றப்பட்ட தனியுரிமை கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட இருந்தது.
தங்கள் தகவல்கள் மற்றவர்களுக்குப் பரிமாறப்படும் என்ற அச்சத்தில் உலகமெங்கும் வாட்ஸ்அப் பயனர்கள் சிக்னல் மற்றும் டெலிகிராம் செயலிகளுக்கு மாற ஆரம்பித்தனர். அந்தச் செயலிகளை நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் தரவிறக்கம் செய்தனர். வாட்ஸ்அப், சிக்னல் மற்றும் டெலிகிராம் ஆகிய செயலிகளுக்கு இடையே உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை பற்றிய பல செய்திகளும் வெளிவந்தவண்ணம் உள்ளன.லட்சக்கணக்கான பயனர்கள் தங்கள் செயலியை விட்டு வெளியேறுவதை கண்டு வாட்ஸ்அப் நிர்வாகம் அதிர்ந்துள்ளது.
"எங்கள் தற்போதையை மாற்றத்தைக் குறித்து அநேகர் எந்த அளவுக்கு குழப்பமடைந்துள்ளார்கள் என்பதை கேள்விப்படுகிறோம். எங்கள் கொள்கைகள் மற்றும் அது குறித்த உண்மைகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது மிகவும் வருத்தமளிக்கிறது. அவற்றை பயனர்கள் சரியானவிதத்தில் புரிந்துகொள்ள உதவ விரும்புகிறோம். வாட்ஸ்அப் மிகவும் எளிய சித்தாந்தத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நீங்கள் பகிர்ந்துகொள்ளும் ஒவ்வொரு தகவலும் உங்களுக்கிடையே மட்டுமே இருக்கும். உங்கள் தனிப்பட்ட உரையாடல்கள் என்ட் டூ என்ட் என்கிரிப்ஷன் என்ற முறையில் இரகசியமாகவே இருக்கும். உங்கள் தனிப்பட்ட செய்திகளை வாட்ஸ்அப் அல்லது ஃபேஸ்புக் நிறுவனம் பார்ப்பதில்லை; பேச்சுகளை கேட்பதில்லை. உங்கள் இருப்பிடம் மற்றும் உங்கள் தொடர்பு பட்டியலை நாங்கள் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்துகொள்வதில்லை. வணிக நிறுவனங்களுடனான உரையாடல்களை குறித்த கொள்கையையே மாற்றியுள்ளோம்.
அதிலும் நாங்கள் தரவுகளை எப்படி சேகரிக்கிறோம்; எப்படி பயன்படுத்துகிறோம் என்பது குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளோம். இப்போது அநேகர் வாட்ஸ்அப் மூலம் பொருள்களை வாங்குவதில்லை. எதிர்காலத்தில் பயன்படுத்தத் தொடங்கினால் அந்த சேவை குறித்த விழிப்புணர்வை பயனர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலேயே அறிவிக்கை வெளியிட்டோம். யாருடைய வாட்ஸ்அப் கணக்கும் பிப்ரவரி 8ம் தேதி முடக்கப்படவோ அல்லது அழிக்கப்படவோ போவதில்லை. வாட்ஸ்அப்பின் கொள்கை மற்றும் பாதுகாப்பு எப்படி செயல்படுகிறது என்பதை குறித்த சரியான தகவல்களை மக்களுக்குக் கொண்டு செல்ல இருக்கிறோம்.மே 15ம் தேதி புதிய வணிக தெரிவுகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் பயனர்கள் கொள்கையை படிப்படியாக மறுபரிசீலனை செய்துகொள்ளலாம்," என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.