உலகம் முழுவதும் பார்த்தால் தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிகமாக பருகப்படுவது தேநீர்தான். குளிரோ, வெயிலோ, டீ குடிப்பவர்கள் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் குடித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு கோப்பை தேநீர் நம் மனதில் புத்துணர்வை கொடுக்கிறது என்பதை மறுக்க இயலாது. ஏதோ உறவினர்களோடு, நண்பர்களோடு அரட்டையடிக்கும்போது நேரப்போக்குக்காக குடிப்பது டீ என்று எண்ணிக்கொண்டிருந்தால் உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ளுங்கள். ஆம், டீ ஓர் ஆரோக்கிய பானம் ஆகும். குறிப்பாக முதியவர்களுக்கு டீ அதிக பயன்தரும் பானமாகும்.
தேநீரும் முதியோர் நலனும்
வயதாகும்போது நோய் எதிர்ப்பாற்றல் குறைகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. முதுமை, தீவிரமான நோய்கள் தாக்குவதற்கு வாய்ப்பு அதிகமான பருவம். வயதாகும்போது நோய் தாக்காமல் கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம்.
தற்போது வெளியாகியுள்ள ஓர் ஆய்வு முடிவு, 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் ஒரு நாளைக்கு 5 கோப்பை தேநீர் பருகினால் அவர்களது கவனம் கூடுகிறது; மறுவினையாற்றும் வேகம் அதிகரிக்கிறது என்று தெரிவிக்கிறது. வாகனம் ஓட்டுவது போன்று கவனம் தேவைப்படும் விஷயங்களை முதியோர் செய்வதற்கு தேநீர் உதவுகிறது என்று அந்த ஆய்வு கூறுகிறது.
ஆய்வு
2006 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட 1000 நபர்களிடம் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. முதியோருக்கு வரக்கூடிய ஞாபக மறதி பாதிப்பு பிளாக் டீ அருந்துவதால் தடுக்கப்படுகிறதா என்பதற்காகவே அந்த ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் முடிவில் டீ பருகுவதால் முதியோரின் கவன கூர்மை கூடுகிறது என்றும், சிக்கலான பணிகளை செய்ய முடிகிறது என்றும் கண்டுபிடித்தனர். ஆனால், தேநீர் பருகுவதற்கு ஞாபகசக்திக்கும் உள்ள தொடர்பை ஆய்வாளர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை.
சிங்கப்பூர் பல்கலைக்கழகமொன்றில் நடந்த ஆய்வின்படி, டீ அருந்துவோரை மனச்சோர்வு அதிகமாக தாக்குவது இல்லை என்று தெரியவந்துள்ளது. டீயில் உள்ள கேட்டிசின், எல்-தையனின் மற்றும் காஃபின் போன்ற சில கூட்டுப்பொருள்கள், மனப்பாங்கில் உற்சாகத்தை அளிப்பதோடு, ஆயுளை கூட்டுவது, புற்றுநோயை தடுப்பது ஆகிய பணிகளையும் செய்கிறது என்று அந்த ஆய்வு முடிவு கூறுகிறது.
எந்த டீ அருந்தலாம்?
பெரும்பாலும் ஆய்வுக்கு பிளாக் டீ எனப்படும் எதுவும் சேர்க்கப்படாத தேநீரே பயன்படுத்தப்பட்டது. ஆனாலும், அனைத்து தேநீர்களிலும் ஒரேவிதமான கூட்டுப்பொருள்களே அடங்கியுள்ளன. ஆகவே சாதாரண டீ அருந்தினாலும் அதே பயன் கிடைக்கும். ஆனால் சர்க்கரையை குறைவாக சேர்த்து குடிக்கவேண்டும். மூலிகை டீ அருந்துவது சாதாரண டீ அருந்துவதைக் காட்டிலும் அதிக பயனை தரக்கூடும்.