தைராய்டு ஹார்மான்கள் நம் உடலின் வளர்ச்சி, வளர்சிதை மாற்றம் (மெட்டாபாலிசம்) மற்றும் சுகப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நம் உடல் அவற்றை போதுமான அளவு உருவாக்கவில்லையென்றால் அந்நிலை 'ஹைப்போதைராடிசம்' (Hypothyroidism) என்று கூறப்படுகிறது. தைராய்டு செயல்பாடு குறைவாக உள்ளவர்களுக்கு உடல் எடையை குறைப்பது சிரமமான விஷயமாகும். சிலருக்கு தைராய்டு குறைபாட்டின் காரணமாகவே கொழுப்பு மற்றும் எடை அதிகரிக்கக்கூடும். ஆகவே, உடல் எடையை குறைக்கவேண்டுமானால், முதலில் தைராய்டு பிரச்னையை சரி செய்வது அவசியம்.
தைராய்டும் உடல் எடையும்
தைராய்டு செயல்பாடு குறைந்தால், உடலின் வளர்சிதை (மெட்டாபாலிசம்) மாற்றமும் பாதிக்கப்படும். நம் உடலிலுள்ள கலோரிகளை எரிப்பதில் வளர்சிதை மாற்றத்தின் பங்கு முக்கியமானதாகும். ஆகவே, வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பு ஏற்பட்டால், அதன் வேகம் குறையும். வளர்சிதை மாற்ற வேகம் குறையும்போது, உடல் எடை எளிதாக அதிகரிக்கும்; அதிகரித்த எடையை குறைப்பது கடினமாகிவிடும். வளர்சிதை மாற்ற வேகம் குறையும்போது உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவில் மாற்றம் போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம். ஆகவே, தைராய்டு பிரச்னையை சரி செய்வதற்கு உணவு கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கைக்கொள்ள வேண்டும். தைராய்டு கோளாறை கண்டுபிடிக்க தாமதமானால் அதற்குள் உடல் எடை அதிகரித்துவிடும்.
தைராய்டும் உணவு கட்டுப்பாடும்
சரியான தரம் கொண்ட உணவுப்பழக்கம் ஹார்மோன் செயல்பாட்டை நன்றாக வைத்துக்கொள்ள உதவும் என்றாலும் 'ஹைப்போதைராடிசம்' போன்ற குறைபாடுகளை உணவுகளைக் கொண்டு மட்டுமே குணப்படுத்த இயலாது. சரியான ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவதுடன், உடற்பயிற்சிகளும் செய்யும்போது, குறைபாட்டுக்காக தரப்படும் மருந்துகளோடு அவை இணைந்து துரிதமான குணம் கிடைக்க உதவும். வாழ்க்கை முறையில் செய்யும் மாற்றத்தால் தைராய்டு பிரச்னை மேலும் தீவிரமடையாமல் கட்டுக்குள் இருந்தால், எடையை குறைப்பது எளிதாகும். ஆகவே, தைராய்டு கோளாறை கட்டுப்படுத்த உணவுகள் உதவி செய்ய முடியும்.
அயோடின்
உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் அயோடின் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கணக்கெடுப்பு கூறுகிறது. நம் உடலில் தைராய்டு சுரப்பியை தூண்டுவதற்கு அயோடின் தாது அவசியமாகும். தைராய்டை தூண்டக்கூடிய ஹார்மோனை அதிகப்படுத்தும் இயல்பு அயோடினுக்கு உண்டு. மேசை உப்பு, மீன், பால் பொருள்கள், முட்டை ஆகியவை அயோடின் சத்து உடலில் சேருவதற்கு உதவும்.
நார்ச்சத்து
தைராய்டு குறைபாடு இருப்போர், உடல் எடையை குறைப்பதற்கு நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை சாப்பிடவேண்டும். நார்ச்சத்து செரிமானத்தை ஒழுங்குபடுத்தும். நச்சுப்பொருள்களை உடலிலிருந்து வெளியேற்றும். பழங்கள், காய்கறிகள், பயிறுகள் ஆகியவற்றை தினமும் சாப்பிடவேண்டும்.
செலினியம்
தைராய்டை தூண்டக்கூடிய ஹார்மோன் உடலில் அதிகம் சுரப்பதற்கு செலினியம் தாது உதவும். உடல் எடை அதிகரிப்பதற்கு நிலையற்ற அணுக்களான (ஃப்ரீ ராடிகல்ஸ்) காரணமாகின்றன. செலினியம் ஃப்ரீ ராடிகல்ஸை குறைக்கிறது. உடலின் நோய் எதிர்ப்பாற்றலை செலினியம் அதிகரிக்கிறது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிறுமீன்கள், முட்டை, பருப்பு வகைகள் ஆகியவற்றில் செலினியம் அதிகம் உள்ளது.
குறைக்க வேண்டியவை
சர்க்கரை அதிகமுள்ள உணவு, சிறுதானியங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சோயா வகைகள், பேரிக்காய், ஸ்ட்ராபெர்ரி, பிரெக்கோலி, காலிபிளவர், முட்டைகோஸ் போன்ற உணவுகளை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும். ஒழுங்காக உடற்பயிற்சி செய்வது, போதிய நீர் அருந்துவது, சாப்பாட்டு அளவை குறைத்துக்கொள்வது ஆகியவை தைராய்டு பிரச்னையை கட்டுப்படுத்த உதவும்.