ஐபோன் மற்றும் ஐபேட் பயனர்களின் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆப்பிள் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. வெப்கிட் (webkit) பிரௌசரில் சில குறைபாடுகள் (பக்) இருப்பதால் தீங்கு செய்யக்கூடிய இணையதளங்கள் இடைபட்டு ஊறு விளைவிக்கும் அபாயம் இருப்பதால் ஐஓஎஸ் 14.4.2 என்ற மேம்படுத்தல் (அப்டேட்) வெளியிடப்பட்டுள்ளது. செட்டிங்ஸ்>ஜெனரல்>சாஃப்ட்வேர் அப்டேட் என்ற வழிமுறையைப் பின்பற்றி இதை மேம்படுத்திக் கொள்ளலாம்.
பீட்டா ஐஓஎஸ் 14.5 வடிவம் வெளியிடப்படுவதற்கு சில நாள்கள் முன்பு ஐஓஎஸ் 14.4.2 என்ற அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. புதிய மேம்பாட்டில் செயலியை வெளிப்படையாக கண்காணிக்கும் ஆப் டிராக்கிங் டிரான்ஸ்பரன்ஸி வசதி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயனர் செயலி மூலம் மூன்றாம் நபர்களுக்கு தகவல்களை பரிமாறுகிறார் என்பதை அறிந்து எச்சரிக்கும் வசதியும் புதிய மேம்பாட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐஓஎஸ் 14.5 வடிவம் சில முக்கியமான புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது. ஆப்பிள் வாட்ச்சை பயன்படுத்தி, ஆப்பிள் ஐபோனை அன்லாக் செய்யும் முக்கிய அம்சமும் ஐஓஎஸ் 14.5 என்ற புதிய வடிவில் உள்ளது. இதன் மூலம் முகக்கவசம் (ஃபேஸ் மாஸ்க்) அணிந்திருக்கும்போது கூட ஐபோனை அன்லாக் செய்யமுடியும். போனை அன்லாக் செய்வதற்காக ஒவ்வொரு முறையும் ஃபேஸ்மாஸ்க்கை கழற்ற வேண்டிய கட்டாயம் இதன் மூலம் தவிர்க்கப்படும்.