Friday, May 7, 2021

பெண்ணுறுப்பு நோய்த் தொற்றை தடுக்கும்... கர்ப்பந்தரிக்க உதவும்...

by SAM ASIR Apr 13, 2021, 22:23 PM IST

கோடை பருவத்தில் அதிகமாக சேர்த்துக்கொள்ளவேண்டிய உணவு பொருள்களில் ஒன்று தயிர். தயிர் மற்றும் அதைப் போன்ற இன்னொரு வகையான யோகர்ட் இரண்டுமே கோடைக்காலத்தில் அனைவராலும் விரும்பி தேடப்படுபவை. சுவையில் மட்டுமல்ல, சத்திலும் தயிர் சிறந்ததாகும்.

100 கிராம் தயிரில் 98 கலோரி ஆற்றல் உண்டு. 3.4 கிராம் கார்போஹைடிரேட்டும், 4.3 கிராம் கொழுப்பும், 11 கிராம் புரதமும், 364 மில்லி கிராம் சோடியமும், 104 மில்லி கிராம் பொட்டாசியமும் உண்டு.

சுண்ணாம்புச் சத்தாகிய கால்சியம், பி2 மற்றும் பி12 ஆகிய வைட்டமின்கள், பொட்டாசியம், மெக்னீசியம் ஆகிய ஊட்டச்சத்துகள் தயிரில் அடங்கியுள்ளன. கால்சியம் இருப்பதால் தயிர் எலும்புக்கு ஆரோக்கியம் அளிக்கிறது. தயிரில் கால்சியம் அதிக அளவில் இருப்பதால் கொரிஸ்டால் என்னும் ஹார்மோன் உருவாவதை தடுக்கிறது. கொரிஸ்டால் தடுக்கப்படுவதால் உடல் எடை அதிகரிப்பது குறைகிறது.

வயிற்றுக்கு நல்லது

நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் மற்றும் ஈஸ்ட் அடங்கிய புரோபியாடிக் வகையை சார்ந்தது தயிர். ஆகவே, இது வயிற்றுக்கு நல்லது. செரிமான மண்டலத்தில் அழற்சி ஏற்பட்டால் தயிர் அதை குணமாக்கும். வயிற்றுக் கடுப்பு, சீதபேதி போன்ற நோயுள்ளவர்களுக்கு அவலை குழைய வேக வைத்து தயிருடன் கலந்து கொடுக்க சுகம் கிடைக்கும். தயிரிலுள்ள வைட்டமின்கள், புரதம் மற்றும் லாக்டோபேஸில்லஸ் என்ற நுண்ணுயிர் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

இதய ஆரோக்கியம்

இதய பாதிப்பு உருவாகும் வாய்ப்பை தயிர் குறைக்கிறது. தயிர் சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. கொலஸ்ட்ரால் குறைவதால், தமனிகள் (arteries)சுத்தமாக காக்கப்படுகிறது. இரத்த ஓட்டம் சீராக இருக்கிறது. இதனால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

இளமை தோற்றம்

சருமத்தின் வறண்ட தன்மையை தயிர் மாற்றி, ஈரப்பதத்தை அளிக்கிறது. தயிரிலுள்ள லாக்டடிக் அமிலம், சருமத்திலுள்ள இறந்த செல்களை உதிரச் செய்கிறது. ஆகவே தோற்றத்தில் முதுமை தென்படுவது மாறுகிறது. முகத்திற்கு பொலிவூட்டும் ஃபேஸ்பேக் (face packs)களில் இது பயன்படுத்தப்படுகிறது.

இரத்த அழுத்தம்

அமெரிக்க இருதய கூட்டமைப்பின் (AHA) ஆராய்ச்சியின்படி ஒரு வகை தயிரான யோகர்ட் சாப்பிடுகிறவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் குறைவு என்று கூறப்படுகிறது. கொழுப்பு இல்லாத யோகர்ட் சேர்த்துக்கொண்டால் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படாது என்று கூறப்படுகிறது.

பெண்ணுறுப்பு

பெண்ணுறுப்பில் ஈஸ்ட்களின் அளவை சமன் செய்யக்கூடிய லாக்டோபேஸில்லஸ் என்ற நன்மை செய்யும் பாக்டீரியா தயிரில் உள்ளது. இது உடலில் ஏற்படும் அழற்சியை கட்டுப்படுத்துகிறது. ஈஸ்ட்களை கொல்லக்கூடிய ஹைட்ரஜன் பெராக்ஸைடை தயிர் உருவாக்குகிறது.

மகப்பேறு

கொழுப்புச் சத்து நீக்கப்பட்டாத பாலை வெதுவெதுப்பான நிலையில் ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் 4 அல்லது 5 உலர் திராட்சையை (கறுப்பு நல்லது) சேர்க்கவும். அதனுடன் சிறுதுளி உறைமோர் சேர்க்கவும். பின்னர் நன்கு கலக்கவும். இதை 8 முதல் 12 மணி நேரம் மூடி வைக்கவும். இதன் மேல் அடுக்கு படிந்ததும் தயிர் சாப்பிட ஏற்றதாகிவிட்டதாக பொருள். மதிய உணவுடன் சாப்பிடலாம் அல்லது மாலை 3 முதல் 4 மணி இடைவேளையில் சாப்பிடலாம். மகப்பேற்றை விரும்பும் பெண்கள், உலர் திராட்சைக்குப் பதிலாக பேரீச்சம்பழம் சேர்த்துக்கொள்ளலாம்.

இரவில் தயிர் சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். பகலின் வெப்பம் திடீரென குறைந்து இரவில் குளிர்ச்சி ஏற்படுவதால், நுரையீரல் பாதிப்புள்ளவர்களுக்கு சிரமம் ஏற்படும். மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புள்ளதால் இரவில் தயிரை தவிர்க்கலாம்.

You'r reading பெண்ணுறுப்பு நோய்த் தொற்றை தடுக்கும்... கர்ப்பந்தரிக்க உதவும்... Originally posted on The Subeditor Tamil

More Health News

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை