கோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி?

by SAM ASIR, May 4, 2021, 21:20 PM IST

கோவிட்-19 கிருமி நுரையீரலை பாதிக்கிறது. அதனால் மூச்சுவிடுவதில் சிரமம், உடலில் ஆக்ஸிஜனின் செறிவு குறைவது போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. ஏற்கனவே நுரையீரலில் பாதிப்புள்ள ஆஸ்துமா போன்ற நோய் கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று மற்றவர்களைக் காட்டிலும் அதிக சிரமத்தை கொடுக்கிறது.

சில ஆஸ்துமா நோயாளிகள் கோவிட் பாதிப்புக்கான அறிகுறிகளாக தலைவலி, தொடர் காய்ச்சல், நெஞ்சில் இறுக்கம், மூச்சுத் திணறல் ஆகியவற்றை குறிப்பிடுகிறார்கள். ஆஸ்துமா நோயுள்ளவர்களுக்கு கொரோனா தொற்று தீவிர விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஆனால், கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தாலும், ஆஸ்துமாவுக்கு ஏற்கனவே சாப்பிட்டுக்கொண்டிருக்கும் மருந்துகளை, பயன்படுத்தும் இன்ஹேலர்களை தொடர வேண்டும். எக்காரணம் கொண்டும் மருந்துகளை நிறுத்தக்கூடாது.

கோவிட்-19 பாதிப்பை எவ்விதம் நாம் நினைத்துக்கொண்டாலும், இயல்பில் அது வைரஸ் தொற்றாகும். அது நுரையீரலுக்கு காற்று செல்லும் பாதைகளை பாதித்து, அடைப்பதால் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. கோவிட்-19 பாதிப்பு இருந்தாலும் வாய்ப்புள்ளவர்கள் அரை மணி நேரம் நடைபயிற்சி செய்வது நல்லது. எளிய மூச்சுப் பயிற்சிகளை செய்ய வேண்டும். வைட்டமின் சி சத்து அதிகமுள்ள உணவு பொருள்களை சாப்பிட வேண்டும்.

ஆக்ஸிஜனின் செறிவு 90 சதவீதத்திற்கும் குறைவாகும்போது, ஆக்ஸிஜன் கொடுக்கப்படவேண்டும். ஆக்ஸிஜன் செறிவை எளிய பயிற்சி (walk test)ஒன்றின் மூலம் சோதிக்கலாம். கொரோனா பாதிப்பு இருக்கக்கூடும் என்று சந்தேகித்தால், ஆறு நிமிடங்கள் நடந்து பார்க்க வேண்டும். அதற்கு முன்பு உடலில் ஆக்ஸிஜனின் செறிவை சோதிக்க வேண்டும். ஆறு நிமிடங்கள் எவ்வித சிரமமுமில்லாமல் நடக்க முடிந்தால் நுரையீரல் நன்றாக செயல்படுகிறது என்று அர்த்தம். நடந்து முடிக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டால் அல்லது படுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலையில் இருப்பதாக பொருள். ஆறு நிமிடம் நடந்த பிறகு உடலில் ஆக்ஸிஜனின் செறிவை அளவிட வேண்டும். நடப்பதற்கு முன்பிருந்ததை விட 3 சதவீதம் குறைந்திருந்தால், அதாவது நடக்க ஆரம்பிப்பதற்கு முன்பு 96 சதவீதமாக இருந்த ஆக்ஸிஜன் செறிவு ஆறு நிமிடங்கள் நடந்த பிறகு 93 சதவீதமாக குறைந்திருந்தால் நுரையீரல் பழுதுபட்டுள்ளது என்று புரிந்து கொள்ளலாம்.

தீவிர நிமோனியா மற்றும் H1N1 கிருமி தொற்று உள்ளிட்ட பல காரணங்களால் நுரையீரல் பாதிக்கப்படக்கூடும் என்றாலும் தற்போது கோவிட்-19 பரவி வருவதால் பெரும்பாலும் அதன் பாதிப்பின் காரணமாகவே நுரையீரலின் செயல்பாட்டில் தாக்கம் ஏற்படக்கூடும்.

குப்புற படுத்தல், ஒவ்வொரு புறமும் ஒருக்களித்துப் படுத்தல் ஆகியவையும் நுரையீரலுக்குள் காற்று செல்வதற்கு, இரத்த ஓட்டம் அதிகமாக இருப்பதற்கு உதவும்.

You'r reading கோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி? Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை