ஆப்பிள் மொபைல் போன்கள் தேவைக்காக வாங்குபவர்களை விட பகட்டிற்காக வாங்கி உபயோகிப்பவர்கள்தான் அதிகம். இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானுடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
ஃப்ளிப் கார்ட், ஸ்னாப் டீல், அமேசான் போன்ற எண்ணற்ற ஆன்லைன் விற்பனை வர்த்தக நிறுவனங்கள் மற்ற நிறுவனங்களின் பொருட்களை விற்று வருகிறது. இதில் மக்கள் மத்தியிலும் , ஆன்லைன் வர்த்தகத்திலும் முன்னிலை வகிப்பது அமேசான் நிறுவனமாகும்.
தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து பொருட்களையும் உலகம் முழுவதும் விற்பனை செய்யக்கூடிய உரிமையை அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் பெற்றுள்ளது.
இதன்படி ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களை நேரடியாக தனது வலை தளத்தில் விற்பனை செய்ய இருப்பதாக அமேசான் நிறுவனம் அதிகாரப் பூர்வமாக தெரிவித்துள்ளது.
ஐபோன் Xs, ஐபோன் XR, ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் பீட்ஸ் ஹெட்போன் மற்றும் ஐபேட் ப்ரோ ஆகிய பொருட்கள் கூடிய விரைவில் அமேசான் வலைத் தளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது என்பதனையும் தெரிவித்துள்ளனர்.
இரு நிறுவனங்களுக்கு இடையேயான இந்த ஒப்பந்தம் அமெரிக்கா, ஜப்பான், லண்டன், ஜெர்மனி, இத்தாலி மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.