தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தம் செய்யவும் சிறப்பு முகாம் இன்று அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தப்பணிகளை மேற்கொள்ள மொத்தம் 67 ஆயிரத்து 644 வாக்குச்சாவடிகளில் முகாம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் தற்போது வாக்காளர் சுருக்க திருத்தபணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அடுத்த மாதம் இறுதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் தங்களின் பெயர்கள் பட்டியலில் சரியாக இடம்பெற்றுள்ளதா என்று சரிபார்க்க வேண்டும். மேலும் வாக்களர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று மற்றும் வரும் 23ம் தேதி சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முகாமில் வரும் ஜனவரி மாதம் 1ம் தேதி அன்று 18 வயது பூர்த்தி அடைபவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை பொறுத்தவரையில், 16 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல்களில் பெயர் சேர்க்கும் முகாம் இன்று நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு தொடங்கிய முகாம் மாலை 5.30 மணி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு முகாமை தவிர, விண்ணப்ப படிவங்களை அனைத்து மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம். இதற்காக அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல், www.elections.tn.gov.in மற்றும் nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.