பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்தியா நடத்திய தாக்குதலால் நாடு முழுவதும் பாஜக அலை வீசுகிறது என கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா கூறியதை, பாகிஸ்தான் பத்திரிகைகளும், அரசியல் கட்சிகளும் விமர்சிக்க, அப்படியெல்லாம் பேசவில்லை என எடியூரப்பா பின் வாங்கியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ராணுவ நடவடிக்கையால் பாஜகவுக்கு ஆதரவான அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 22-ல் பாஜகவுக்கு வெற்றி கிட்டப் போகிறது என கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக மாநில தலைவருமான எடியூரப்பா தெரிவித்த கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்தது.
எடியூரப்பாவின் கருத்து இந்தியா தாண்டி பாகிஸ்தானிலும், இரு நாடுகளிடையே அணு ஆயுத போர் பதற்றத்தை பாஜக ஏற்படுத்துகிறதா? என்று எடியூரப்பாவின் கருத்தை ஒப்பிட்டு பாகிஸ்தான் மீடியாக்களும், அரசியல் கட்சிகளும் கடும் விமர்சனங்களை முன்வைத்தன.
பாஜக மத்திய அமைச்சர் வி.கே.சிங் கும் எடியூரப்பாவின் பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். கர்நாடக முதல்வர், துணை முதல்வர் ஆகியோரும் தேர்தல் ஆதாயத்துக்காக இந்தியப் படை வீரர்களை பணயம் வைப்பதா? என்று எடியூரப்பா மீது பாய்ச்சல் காட்டினர்.
சொந்தக் கட்சி, எதிர்கட்சிகள், பகை நாடு என பல தரப்பிலும் எழுந்த கண்டனக் குரல்களால் விழி பிதுங்கி விட்டார் எடியூரப்பா . ஐயோ.. நான் அப்படி சொல்ல வே இல்லை. நான் சொன்ன கருத்து தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. எனக்கு கட்சியை விட நாடு தான் முக்கியம் என்று பிதற்றி அழுகாத குறையாக மறுப்பு தெரிவித்துள்ளார்.