பாகிஸ்தானால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானி விங் கமாண்டர் அபிநந்தனை விடுதலை செய்வதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார். வாகா எல்லையில் நாளை இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறார்.
புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய விமானப் படை தீவிரவாதிகளின் முகாம்களை வெற்றிகரமாக அழித்தது.
இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லையில் நேற்று காலை அத்துமீற, இந்திய விமானங்கள் விரட்டியடித்தன. இதில் இந்தியாவின் மிக் ரக விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் சுடப்பட்டு வீழ்த்தப்பட்டது. பாராசூட்டில் தப்பிய விமானி அபிநந்தன் சிறைப்பிடிக்கப்பட்டார்.
சென்னையைச் சேர்ந்த இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தனை விடுவிக்கக் கோரி ஒட்டுமொத்த இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் குரல் கொடுத்தன. மத்திய அரசும் தூதரக ரீதியில் நடவடிக்கை மேற்கொண்டது.
இந்நிலையில் இன்று மாலை பாகிஸ்தான் நாட்டு பாராளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான், இந்திய விமானி அபிநந்தனை விடுவிப்பதாக அறிவித்தார். நல்லெண்ண அடிப்படையில் விடுவிப்பதாகவும், இரு நாட்டு பிரச்னைகள் குறித்து இந்தியப் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயார் என இம்ரான் அறிவித்தார்.
நாளை இந்தியா பாகிஸ்தான் எல்லையான வாகாவில் அபிநந்தன் இந்தியா வசம் ஒப்படைக்கப்படுகிறார்.அபிநந்தன் விடுவிக்கப்படும் தகவலைக் கேட்டு அவருடைய குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் அறிவிப்பை இந்திய தலைவர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.