லோக்சபா தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக எம்.பி. கனிமொழியை வீழ்த்தவும் திருப்பூர் தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் தமிழிசையை வெல்ல வைக்கவும் அதிமுக தமது ஆட்டத்தை தொடங்கிவிட்டது.
ராஜ்யசபா எம்.பி.யாக இருக்கும் கனிமொழி இம்முறை லோக்சபா தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இதற்காக கடந்த ஓராண்டுக்கும் மேலாக தூத்துக்குடி தொகுதியை குறிவைத்து பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
அதேபோல் அதிமுக வலிமையாக இருக்கும் திருப்பூர் தொகுதியில் அந்த கட்சியின் முதுகில் ஏறி வெற்றி பெற்றுவிடலாம் என்பது தமிழிசையின் கணக்கு. இந்த இரு தொகுதி வேட்பாளர்களும் உறுதி என்ற நிலையில் அதிமுக அதிரடி வியூகங்களை வகுத்துள்ளது.
தூத்துக்குடியில் கனிமொழியை வீழ்த்த அமைச்சர் கடம்பூர் ராஜூவையும் திருப்பூரில் தமிழிசையை வெல்ல வைப்பதற்கு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனையும் களமிறக்கியுள்ளது அதிமுக. இது தொடர்பாக அதிமுக நிர்வாக அமைப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றம் விவரம்:
தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் சி.த.செல்லபாண்டியன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அ.தி.மு.க. நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு தூத்துக்குடி மாவட்டம் என செயல்பட்டு வரும் மாவட்ட அ.தி.மு.க. அமைப்பு, இனி தூத்துக்குடி வடக்கு மாவட்டம், தூத்துக்குடி தெற்கு மாவட்டம் என 2 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு செயல்படும்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் (தனி), கோவில்பட்டி ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளடங்கும். தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி செயல்படும்.
இதன் அடிப்படையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு ஆகிய மாவட்டங்களுக்கு, மாவட்ட அளவில் திருத்தி அமைக்கப்பட்ட அ.தி.மு.க மற்றும் சார்பு அமைப்புகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும் வரை, தற்போதுள்ள நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாக பொறுப்புகளில் தொடர்ந்து செயலாற்றுவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் சட்டசபை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் நியமிக்கப்படுகிறார்.
இவ்வாறு அதிமுக தெரிவித்துள்ளது.