மக்களவைத் தேர்தல் களத்தில் திமுக சார்பில் போட்டியிட உள்ளவர்களில் பெரும்பாலானோர் முக்கியத் தலைகளின் வாரிசுகள் தான் என்ற தகவல் பரவிக் கிடக்கிறது.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளுக்கு 19 தொகுதிகளை ஒதுக்கியது போக எஞ்சிய 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தையின் போது திமுகவுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதை முன்கூட்டியே நிச்சயம் செய்து விட்டுத்தான் கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசித்ததாம் திமுக மேலிடம் .
இதற்குக் காரணம் திமுகவின் பெருந்தலைகளின் வாரிசுகள் பலரும் இந்தத் தேர்தலில் களம் காணப்போகிறார்கள் என்பது தானாம். இந்த வகையில் கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதி ஒதுக்கீட்டுப் பேச்சுவார்த்தை நடத்தும் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு ஆகியோரும் தங்கள் வாரிசுகளை களத்தில் இறக்கி விடத் தயாராகி தங்களுக்கான தொகுதிகளை பத்திரப்படுத்தி விட்டனர்.
திமுகவில் அரசியல் வாரிசுகள் களமிறங்கப் போகும் தொகுதிகள் எவை? வாரிசுகள் யார்? என்ற தகவலும் கசிந் துள்ளது. வட சென்னையில் முன்னாள் அமைச்சரும் திமுக பொருளாளருமாக இருந்த ஆற்காடு வீராசாமியின் கேன் கலாநிதி . மத்திய சென்னையில் முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன், தென் சென்னையில் முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியனின் மகளும், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரியுமான தமிழச்சி தங்கப்பாண்டியன், வேலூர் தொகுதியில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் ஆகியோருக்கு சீட் உறுதி எனக் கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னாள் அமைச்சர் க.பொன்முடியின் மகன் கவுதம சிகாமணியும், கடலூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவனும், ஆரணியில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பனும் போட்டியிட உள்ளனர்.
தூத்துக்குடியில் கருணாநிதியின் மகள் கனிமொழி போட்டியிடுவது உறுதியாகி தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்த சங்கதி தான். மேலும் சில தொகுதிகளிலும் அரசியல்வாதிகள் வாரிசுகளை களம் இறக்க தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தகவலும் வெளியாகி திமுக வட்டாரத்தில் பரபரத்து காணப்படுகிறது.