கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்த ஸ்ரீசாந்த் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது அனைவரும் அறிந்ததே. இதற்காக சில நாள்கள் சிறைவாசமும் அனுபவித்ததுடன், பி.சி.சி.ஐ-யிடமிருந்து வாழ்நாள் தடையும் பெற்றார். ஆனால், இதற்காக நீதிமன்றப் படிக்கட்டு ஏறிய ஸ்ரீசாந்த் வெற்றியும் பெற்றார். ஆனால், அவர் மீதான வாழ்நாள் தடையை நீக்க பி.சி.சி.ஐ மறுத்துவிட்டது. பி.சி.சி.ஐ-யின் முடிவை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளார். கிரிக்கெட் விளையாட முடியாமல் போனாலும், தனது எதிர்காலத்தை இப்போது சினிமா மூலம் வடிவமைத்து வருகிறார். ஹீரோவாகவும் அவர் நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடித்த டீம் 5 படம் தமிழ், மலையாளத்தில் வெளியாகி ஓரளவுக்கு வரவேற்பு பெற்றது. இதேபோல் அக்சர் 2 உள்ளிட்ட இந்திப் படங்களிலும் நடித்துள்ளார். அதேநேரம் கேரளாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலும் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு தோல்வி பெற்றார்.
சமீபத்தில் சல்மான் கான் நடத்திய இந்தி பிக் பாஸ் போட்டியிலும் பங்கேற்று மக்களின் மனங்களை வென்றார். இந்நிலையில் வாழ்நாள் தடைக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அப்போது ஸ்ரீசாந்துக்கு வழங்கப்பட்ட வாழ்நாள் தடையை நீதிமன்றம் ரத்து செய்தது. கூடவே, ஸ்ரீசாந்த் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்வது குறித்து பிசிசிஐ முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தீர்ப்பு குறித்து பேட்டியளித்துள்ள ஸ்ரீசாந்த், தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. விரைவில் கிரிக்கெட்டுக்கு திரும்புவேன். ஆறு மாதத்தில் பயிற்சி மேற்கொண்டு முழு பார்முக்கு வருவேன்" எனக்கூறியுள்ளார்.