தேர்தல் களத்தில் முதல் ஆளாக பிரச்சாரத்தை தொடங்கி விட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் .சொந்த ஊரான திருவாரூரில் தெருத்தெருவாக நடந்து சென்று வாக்கு சேகரித்த மு.க.ஸ்டாலினை பொது மக்கள் மலர் தூவி வரவேற்றனர்.
தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் தேசியக் கட்சிகளான காங்கிரசும், பாஜகவும் மட்டுமே இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரக் களத்திலும் குதித்துள்ளன.
முக்கியக் கட்சிகளின் தலைவர்களில் முதல் ஆளாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை சொந்த ஊரான திருவாரூரில் இன்று காலை தொடங்கினார். கருணாநிதியின் மறைவால் திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் திமுக சார்பில் பூண்டி கலைவாணன் போட்டியிடுகிறார்.நாகை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செல்வராஜ் போட்டியிடுகிறார். இவர்களை ஆதரித்து திருவாரூர் அம்மன் தெருவிலிருந்து நடந்து சென்றபடியே வீடு வீடாகச் சென்று வாக்கு மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
காலை 7 மணிக்கு பிரச்சாரத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலினுக்கு பொது மக்கள் மலர் தூவி வரவேற்பளித்தனர். தொடர்ந்து வாசன் நகர் உள்பட பல பகுதிகளில் நடந்தே சென்று வீடு வீடாக வாக்கு சேகரிப்பில் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டார்