திண்டுக்கல் தொகுதியில் அதிமுக போட்டியிடவில்லை. கூட்டணிக் கட்சியான பாமக-வுக்கு தொகுதியை ஒதுக்கியுள்ளது அதிமுக. இதனால், திண்டுக்கல் அதிமுக தொண்டர்கள் அப்சட்டில் இருக்கின்றனர். ஆகையால், அதிமுக ஓட்டுகளை தங்கள் பக்கம் திருப்பத் தீவிர யோசனையில் டிடிவி தினகரன் இருக்கிறார் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமமுக சார்பில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் அண்மையில் வெளியானது. இதில், திண்டுக்கல் மற்றும் தேனி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
இதே தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஜோதிமுத்து, திமுக வேட்பாளர் வேலுச்சாமி ஆகியோர் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். திண்டுக்கல்லில் அதிமுக போட்டியிடாத நிலையில், திமுகவுக்கு நெருக்கடி தரும் வலுவான வேட்பாளரைத் தேடி வருகிறார் டிடிவி. அதோடு, செலவினங்களை பற்றிக் கவலைபடாத வசதி படைத்த வேட்பாளரை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளார். இதன் காரணமாகவே, வேட்பாளர் அறிவிப்பு இழுபறியாக உள்ளது என நிர்வாகிகள் கூறுகின்றனர்.