அதிமுக கூட்டணியை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார்.. நெட்டிசன்களும் 'ஒரே ஒரு குருக்கள் வரார் வழி விடுங்கோ' என்ற ஹேஸ்டேக்கைப் போட்டு டிவிட்டரில் ஓவராக கலாய்த்து வருகிறார்கள்.
தேர்தல் பிரச்சாரங்களுக்கு கட்சிகளின் தலைவர்கள் வருகிறார்கள் என்றால் அந்தப் பகுதியே திருவிழா போல் வழியெங்கும் மக்கள் திரண்டு விடுவார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி போன்றோர் வருகிறார்கள் என்றால் மணிக்கணக்கில் கால் கடுக்க காத்திருந்தது ஒரு காலம்.
இந்த முறை ஜெயலலிதா, கருணாநிதி போன்ற ஆளுமைகள் இல்லாமல் முதன் முறையாக தேர்தலை சந்திக்கிறது தமிழகம். அதிமுகவில் இபிஎஸ்,ஓ பிஎஸ், திமுகவில் மு.க.ஸ்டாலின், கனிமொழி, தேமுதிகவில் பிரேமலதா, மதிமுகவில் வைகோ இவர்கள் இந்தத் தேர்தலில் பிரச்சார விஐபிக்கள்.
அதிமுக கூட்டணிக்காக ஜெயலலிதா பாணியில் வேன் பிரச்சாரத்தை நேற்று துவக்கினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. முன்னும், பின்னும் ஏகப்பட்ட காவல் துறை வாகனங்கள் அணிவகுக்கவும், பிரச்சார வேனில் கருப்புப் பூனைப் படையினர் தொங்கிக் கொண்டு செல்ல பந்தாவாக வேனில் நின்றபடி எடப்பாடி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
வழி நெடுகிலும் வேனில் நின்றபடி ஆட்களே இல்லாத இடத்திலும் எடப்பாடி ஓட்டுக் கேட்டு கும்பிடு போட்டுச் செல்லும் காட்சிகளை படம் பிடித்து '#ஒரே ஒரு குருக்கள் வருகிறார் வழி விடுங்கோ#' என்ற ஹேஸ்டேக்டையும் உருவாக்கி விட்டார்கள்.
இந்த ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் படு வைரலாகியுள்ளது. எடப்பாடியின் பிரச்சாரப் படங்களை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்களையும் போட்டி ஏகப்பட்ட கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்.