கவுன்சிலர் தேர்தல் முதல் ஜனாதிபதி தேர்தலை வரை, நம்பிக்கை குறையாமல் இடைவிடாது வேட்பு மனுவைத் தாக்கல் செய்து வருகிறார் ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன்.
மேட்டூரில் பஞ்சர் கடை வைத்துள்ளார் பத்மராஜன். 1988-ல்லிருந்து நடக்கும் தேர்தலில் தவறாமல் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்து வருகிறார். நண்பர்களின் தூண்டுதல்களும், அவர்களின் கேலி கிண்டல்தான் தன்னை தேர்தலில் போட்டியிட தூண்டியதாகக் கூறுகிறார்.
இதுவரை, தேர்தலுக்காக மட்டும் ரூ.30 லட்சத்துக்கு மேல் செலவழித்து உள்ளதாகக் கூறும் பத்மராஜன், 1991ல் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ்-க்கு எதிராக ஆந்திரா மாநிலம் நந்தியால் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ததற்காகத் தன்னை கடத்திச் சென்றதாகச் சொல்கிறார்.
2011 சட்டமன்றத் தேர்தலில் மேட்டூர் தொகுதியில் 6,273 வாக்குகள் பெற்றார். இதுதான் பத்மராஜன் பெற்ற அதிக வாக்குகள் ஆகும். கேலி, கிண்டல் என எதையும் பொருட்படுத்தாமல், மீண்டும் 2019 தேர்தலில் தருமபுரி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார் பத்மராஜன். தனது 2௦௦ -வது வேட்பு மனுவையும் தாக்கல் செய்துவிட்டார். கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதே தனது சாதனை என்கிறார் பத்மராஜன்.