‘ஓட்டுக்காக கை, கால்களில் விழ முடியாது’ என்று அதிமுக வேட்பாளர் தம்பிதுரை வாக்கு சேகரிப்பின் போது பேசியுள்ளார்.
தமிழகத்தில், மக்களவைத் தேர்தலுடன் காலியாக உள்ள சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. இதனால், பிரச்சார களம் களைகட்டியுள்ளது. கரூர் மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் தம்பிதுரை, தேர்தல் பரப்புரையைத் தொகுதியில் மேற்கொண்டு வருகிறார். அதன் வகையில், ஏமூர் புதூர் காலனி பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது, அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு, போக்குவரத்து வசதியின்மை உள்ளிட்ட பிரச்சினைகளை எடுத்துரைத்து வாக்குவாதம் செய்துள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல் கோபம் அடைந்த தம்பிதுரை, நீங்க ஓட்டுப் போட்டா போடுங்க, போடாட்டி போங்க, அதற்காக உங்கள் கை, கால்களில் விழ முடியாது. இந்த பகுதிக்குப் பேருந்து விடும்படி அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். ரூ. 81 கோடி மதிப்பிலான குடிநீர்த் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் பலர் இங்கு எம்.பியாக இருந்துள்ளனர். அவர்களெல்லாம் என்ன செய்தார்கள் என்று பேசினார். இவரின், பேச்சு தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.