தமக்கு சொந்தமான இடங்களில் எந்த நேரத்திலும், வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெறலாம் என்றும் அவர்களை வரவேற்க தயாராக இருப்பதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் டிவிட்டரில் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தல் நடக்கவுள்ள நேரத்தில், நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளின், முக்கியப் பிரமுகர்களை குறிவைத்து வருமான வரித்துறையினர் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளார். இதில் மாநில முதல்வர்களும் குறி வைக்கப்படுகின்றனர்,.கர்நாடக முதல்வர் குமாரசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் உள்ளிட்டோரின் ஆதரவாளர்கள் பலரிடம் வருமான வரித்துறை நடத்திய சோதனை எதிர்க்கட்சிகளிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தான் தமக்கு சொந்தமான இடங்களில் எந்த நேரத்திலும், வருமான வரி சோதனை நடைபெறலாம் என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
வருமான வரித் துறை அதிகாரிகளை வரவேற்க காத்திருப்பதாகவும், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிகளை முடக்கவே, இந்த நடவடிக்கை என்பது தெரிந்த செய்தி தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அரசின் அத்து மீறல்களை பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள், தேர்தல் நாளன்று சரியான பாடம் புகட்டுவார்கள்" எனவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.