இந்தியாவில் எதிர்வரும் மக்களவை தேர்தலில் தெலங்கானாவின் நிஜாமாபாத் தொகுதியில்தான்அதிகபட்சமாக 185 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
17வது மக்களவை தேர்தல் இம்மாதம் 11ம் தேதி தொடங்கி மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தெலங்கானாவின் மக்களவை தொகுதிக்கான தேர்தல் முதல் கட்டத்தில் நடைபெற உள்ளது. இங்குள்ள நிஜாமாபாத் தொகுதியில் மட்டும் இந்தியாவிலேயே அதிகபட்சமாக 185 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு மீது அம்மாநில விவசாயிகள் கடும் கோபத்தில் உள்ளனர். அதன் வெளிப்பாடாக சந்திரசேகர ராவ் மகள் கவிதா போட்டியிடும் நிஜாமாபாத் தொகுதியில் 170 விவசாயிகள் அவருக்கு எதிராக போட்டியிடுகின்றனர்.
நிஜாமாபாத் தொகுதியில் மொத்தம் 185 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் அந்த தொகுதியில் தேர்தலை நடத்துவதற்கான செலவும் எகிறும். அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் சுமார் ரூ.35 கோடி செலவிடும் என தெரிகிறது. இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ரஜத் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நிஜாமாபாத் தொகுதியில் மொத்தம் 7 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. தேர்தலுக்காக ஒரு தொகுதிக்கு ரூ.3 கோடி செலவாகும். அதன்படி 7 தொகுதிக்கு ரூ.21 கோடி செலவாகும். ஆனால் இந்த மக்களவை தொகுதியில் 185 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் கூடுதலாக ஒட்டுபதிவு எந்திரங்கள் தேவைப்படுகிறது. மின்னணு எந்திரங்களை எடுத்து வரவும், கொண்டு செல்லவும் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும், தேர்தல் பணிக்கு அதிகளவில் பணியாளர்கள் தேவைப்படுவதால் அதற்கான செலவும் அதிகரிக்கும். எனவே இந்த தொகுதியில் தேர்தலுக்காக கூடுதலாக ரூ.14 கோடி செலவாகும். அதன்படி பார்த்தால் அந்த தொகுதியில் மட்டும் தேர்தலுக்காக சுமார் ரூ.35 கோடி செலவாகும். இவ்வாறு அவர் கூறினார்.