தேனி தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச் செல்வனுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி அமமுக வேட்பாளர் கதிர்காமு மீது பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்து மட்டுமல்லாமல், இது தொடர்பான ஆபாச வீடியோவும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புகாரின் பேரில் கதிர்காமு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கதிர்காமு, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டிடிவி தினகரன் அணிக்குத் தாவினார். இதனால், சபாநாயகர் தனபால் உத்தரவின் படி, தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தலில் மீண்டும் இதே தொகுதியில் அமமுக சார்பில் பரிசு பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறார் கதிர்காமு.
இந்நிலையில், அவர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. தன் மீது சுமத்தப்பட்ட புகார் பொய்யானது என்றும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாரின் தூண்டுதலால் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக கதிர்காமு குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில், இந்த வழக்கில் தேனி தொகுதி அமமுக சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்ச் செல்வன் பெயரும் அடிபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்குமாருக்குப் பிரதான போட்டியாகக் கருதப்படுபவர் தங்க தமிழ்ச் செல்வன். இப்படியான, சுழலில் பாலியல் விவகாரத்தில் தங்க தமிழ்ச் செல்வன் சிக்கியுள்ளார்.
கதிர்காமு பாலியல் வன்கொடுமை செய்ததாக, பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் மீது போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், தங்க தமிழ்ச் செல்வனின் பெயரும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த, விவகாரத்தில் கதிர்காமுவோடு சேர்த்து தங்க தமிழ்ச் செல்வனுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அமமுக-வினர் கலக்கத்தில் உள்ளனர்.