லண்டன் ; ஈக்குவடார் அரசு அளித்த அரசியல் அடைக்கலத்தை விலக்கிக் கொண்டதை அடுத்து விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை லண்டன் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஈக்குவடார் தூதரகத்திற்குள் நுழைந்து அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
விக்கி லீக்ஸ் இணையதளம் மூலம் அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்ச். இதனால், அவர் மீது அமெரிக்கா கடும் கோபம் கொண்டது. இதற்கு பிறகு, அசாஞ்ச் பல நாட்டு ரகசியங்களையும் போட்டு உடைத்து வந்தார். இது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்தியாவின் ரகசியங்களைக் கூட அவர் வெளியிட்டதால், இந்தியாவிலும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 2012ம் ஆண்டில் ஸ்வீடன் நாட்டில் அசாஞ்ச் மீது பாலியல் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தன்னை கைது செய்து, அமெரிக்காவுக்கு அனுப்பி விடுவார்களோ என்று பயந்த அசாஞ்ச், லண்டனில் உள்ள ஈக்குவடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார். அவருக்கு ஈக்குவடார் நாட்டு அரசு அரசியல் அடைக்கலம் கொடுத்ததது. அவரை விடுவிக்குமாறு தொடர்ந்து இங்கிலாந்து அரசு கோரிக்கை விடுத்து வந்தது. ஆனால், தன்னை அமெரிக்காவுக்கு அனுப்பி மரணதண்டனை நிறைவேற்றி விடுவார்கள் என்று அசாஞ்ச் பயந்தார். மனிதாபிமானமிக்க ஈக்குவடார் அரசும் அவரை விடுவிக்காமல் இருந்தது.
இந்நிலையில், ஈக்குவடார் அரசு இன்று திடீரென அசாஞ்ச்சுக்கு அளித்த அரசியல் அடைக்கலத்தை விலக்கிக் கொள்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து லண்டன் மெட்ரோ போலீஸ் படையினர், ஈக்குவடார் தூதரகத்திற்குள் நுழைந்து அசாஞ்ச்சை அலாக்காக தூக்கி வந்தது. அவருக்கு கைவிலங்குகள் பூட்டி வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு வெளியே வந்த போலீசார் தற்போது காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர். விரைவில் அவரை வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
அவர் கைது செய்யப்பட்டதை இங்கிலாந்து உள்துறைச் செயலாளர் சஜித் ஜாவித் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அதில் அவர், ‘‘‘கடந்த 2012ம் ஆண்டு முதல் ஈக்குவடார் அரசிடம் கோரிக்கை விடுத்து வந்ததன் பலனாக இன்று அசாஞ்ச் கைது செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டு அரசின் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிக்கிறேன். யாருமே சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல’’ என்று கூறியிருக்கிறார்.
ஈக்குவடார் அதிபர் லெனின் மொரினோ கூறுகையில், ‘‘அசாஞ்ச் தொடர்ந்து சர்வதேச விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்தார். ஈக்குவடார் அரசை அவமதிக்கும் வகையிலும், மோசமான முறையிலும் அவரது செயல்பாடுகள் இருந்ததால் அவருக்கு கொடுத்த அடைக்கலம் விலக்கிக் கொள்ளப்பட்டது. எனினும், அவரை துன்புறுத்தி மரணதண்டனை விதிக்கக் கூடிய நாடுகளுக்கு அவரை கடத்த வேண்டாம் என்று இங்கிலாந்து அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்’’ என்று கூறியிருக்கிறார்.