கரூர் பேருந்து நிலையம் அருகே ஏற்பட்ட மோதலால், அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு இறுதிக்கட்ட பிரசாரம் செய்வதற்கான அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டார் ஆட்சியர் அன்பழகன்.
தமிழகத்தில் நாளை மறுநாள் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. அதன்படி, கரூர் தொகுதி பேருந்து நிலையத்தின் அருகே இறுதிக்கட்ட பிரசாரம் செய்ய திமுக கூட்டணி காங்கிரஸ் மற்றும் அதிமுகவினர் அனுமதி கேட்டிருந்தனர்.
இதன் காரணமாக, திமுக, காங்கிரஸ், அதிமுக தொண்டர்கள் கரூர் பேருந்து நிலையத்தின் அருகே திரண்டனர். அப்போது, திமுக-அதிமுகவினர் இடையில் மோதல் ஏற்பட்டது. அதோடு, திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு பிரசாரம் செய்ய வந்த நாஞ்சில் சம்பத் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, திமுக - அதிமுகவினர் மோதலை தடுக்க சென்ற காவல்துறை மீதும் கற்கள் வீசப்பட்டதால் 2 காவலரின் மண்டை உடைந்தது. இதனால், அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது.
இதனையடுத்து, மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான அன்பழகன், அதிமுக - காங்கிரஸ் கட்சியினர் பேருந்து நிலையத்தின் அருகே இறுதிக்கட்ட பிரசாரம் செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். தற்போது அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டுள்ளது.
இந்த மோதல் குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் கரூர் தொகுதி வேட்பாளர் ஜோதிமணி, ‘கரூர் தொகுதியில் நடந்துகொண்டிருப்பது இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரமல்ல.யுத்தம்! நமது இறுதிக்கட்ட பிரச்சாரம் திட்டமிட்டபடி மாலை 4- 6 மணிவரை பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் நடைபெறும். இதற்கான நீதிமன்ற உத்தரவினை பெற்றிருக்கிறோம். அதிகாரத்தை விட, அராஜகத்தை விட உண்மை வலிமையானது’ எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், கரூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகத் தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது.