டெல்லியைச் சேர்ந்த பாஜக எம்.பி. ஒருவர், மீண்டும் போட்டியிட வாய்ப்பு தராததைக் கண்டித்து காங்கிரசில் இணைந்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் கடந்த 2014 தேர்தலில் பாஜக வென்றது. இதில் வடமேற்கு டெல்லியில் இருந்து எம்.பி.யானவர் உதித்ராஜ். தலித் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த உதித்ராஜ், இந்தியன் ஜஸ்டிஸ் பார்ட்டி என்ற கட்சியின் தலைவராக வட மாநிலங்களில் செல்வாக்கு பெற்றிருந்தார்.கடந்த 2014 தேர்தலின் போது இவரை வளைத்தது பாஜக . இதனால் கட்சியை கலைத்து விட்டு பாஜகவில் ஐக்கியமான உதித்ராஜை டெல்லியில் நிறுத்தி எம்.பி.யாக்கியது.
ஆனால் இம்முறை இவருக்கு அத்தொகுதியை வழங்காமல், வேட்பு மனுத் தாக்கத்துக்கு கடைசி நிமிடம் வரை வேட்பாளர் பெயரை அறிவிக்காமல் இழுத்தடித்தது பாஜக . இதனால் தமது ஆதரவாளர்களுடன் டெல்லி பாஜக தலைமை அலுவலகம் முன் பெரும் போராட்டம் நடத்தினார் உதித் ராஜ். மேலும் தம்மை வேட்பாளராக அறிவிக்காவிட்டால் கட்சி மாறி விடுவேன் என்றும் பகிரங்க மிரட்டல் விடுத்திருந்தார்.
ஆனாலும் உதித்ரா ஜின் மிரட்டலுக்கு பணியாத பாஜக, சமீபத்தில் கட்சியில் இணைந்த பிரபல பாடகரான ஹன்ஸ்ராஜ் ஹான்ஸ் என்பவரை வேட்பாளராக அறிவித்துவிட்டது. இதனால் கோபமடைந்த உதித்ராஜ் ஏற்கனவே மிரட்டல் விடுத்தபடி இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரசில் ஐக்கியமாகி விட்டார்.