பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை தற்போது யார் வசம் இருக்கிறது? என தமிழக அரசைக் கடுமையாக கண்டித்துள்ளார் டிடிவி தினகரன்.
பொள்ளாச்சியில், கல்லூரி மாணவிகளிடம் முகநூல் வாயிலாக நண்பர்களாகப் பழகி, அவர்களை காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இந்த சம்பவம் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில், 60க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு, நான்கு பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ‘பொள்ளாச்சி வழக்கில் அரசியல் பின்புலம் காரணமாக உண்மையான குற்றவாளிகளைத் தப்ப வைக்க ஆரம்பத்தில் முயற்சிகள் நடைபெற்றன. அதற்கு, போலீஸ் அதிகாரிகள் சிலர் துணை போனார்கள். இதனால், குற்றவாளிகள் தப்பிவிடக்கூடாது என்பதால்தான் சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை வெளியில் சொல்லக்கூடாது என்ற நடைமுறை இருந்தும் மாவட்ட எஸ்.பி அந்த தவறை செய்தார். அதே தவறைதான் தமிழக அரசும் செய்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டு அரசாணை வெளியிட்டது. அரசியல் ரீதியாக மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக-அதிமுக கூட்டணி வைத்திருப்பதற்கும் இந்த வழக்கு விசாரணை சிபிஐ விசாரிப்பதில் ஏற்படும் தாமதத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்பது தெரியவில்லை.
தனக்கு மேல் உள்ள அதிகாரி பாலியல் தொல்லை கொடுத்தார் என்று பெண் எஸ்பி ஒருவர் புகார் கொடுத்தும், அது தொடர்பாக ஒரு வழக்கைப் பதிந்து விசாரணை நடத்தாது மட்டுமின்றி, குற்றச்சாட்டுக்கு ஆளான அதிகாரியைப் பெயரளவில் கூட பணியிட மாற்றம் செய்ய எடப்பாடி பழனிசாமி அரசு ஆர்வம் காட்டவில்லை. பெண்கள் பாதுகாப்பில் அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது. பொள்ளாச்சி சம்பவத்தில் அலட்சியமாக இருந்து குற்றத்தை மூடி மறைக்க தற்போது அந்த வழக்கின் விசாரணை யார் வசம் இருக்கிறது? எந்த நிலையில் இருக்கிறது? சிபிஐக்கு மாற்றுவதில் என்ன நடைமுறை சிக்கல்?’ எனப் பல அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து இருக்கிறார் டிடிவி தினகரன்.