‘பணமதிப்பிழப்பினால் ரியல் எஸ்டேட் துறையில் கோடிக்கணக்கில் முதலீடு செய்த காங்கிரஸ்காரர்களுக்குத்தான் நஷ்டம் ஏற்பட்டது. அவர்கள்தான் ஏ.சி. அறையில் உட்கார்ந்து கொண்டு குற்றம்சாட்டுகிறார்கள்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் செல்லாது என்று பணமதிப்பிழப்பு செய்ததால், பல்லாயிரம் சிறு தொழில்கள் நசுங்கி விட்டன. மக்கள் மிகவும் துயரமடைந்தனர் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக பிரச்சாரம் செய்து வருகின்றன. ஏற்கனவே, பணமதிப்பிழப்பினால் பெரிய பலன் எதுவும் கிடைக்கவில்லை என்று பொருளாதார நிபுணர்களும், வங்கியாளர்களும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
இதனால், பா.ஜ.க. இந்த தேர்தலில் பணமதிப்பிழப்பு பற்றி வாயே திறக்காமல் இருந்தது. தேர்தல் அறிக்கையிலும் அது பற்றி எதுவும் சொல்லவில்லை. இந்நிலையில், பணமதிப்பிழப்பு சரியான நடவடிக்கைதான் என்று பிரதமர் மோடி நேற்று பேசியுள்ளார். மேலும், இந்த விஷயத்தில் காங்கிரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஜெபல்பூரில் பா.ஜ.க. வேட்பாளர் ராஜேஷ்சிங்கை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று பேசியதாவது:
பணமதிப்பிழப்பினால் காங்கிரசுக்கு நெருக்கமானவர்களுக்குத்தான் கடுமையான பாதிப்பு. ரியல் எஸ்டேட் துறையில் கோடிக்கணக்கில் முதலீடு செய்த அவர்களுக்குத்தான் பாதிப்பு. ஆனால், மக்களுக்கு நன்மை தரும் வகையில் வீடுகளி்ன் விலை குறைந்திருக்கிறது.
அது மட்டுமல்ல, பணமதிப்பிழப்பினால் 3 லட்சம் போலி லெட்டர்பேடு கம்பெனிகள் கண்டுபிடிக்கப்பட்டு சீலிடப்பட்டுள்ளன. இதனால், கறுப்பு பணம் வைத்திருந்தவர்கள்தான் பாதிக்கப்பட்டார்கள். ஆனால், எதிர்க்கட்சிக்காரர்கள் சிலர் டெல்லியில் ஏ.சி. அறையில் உட்கார்ந்து கொண்டு, இந்த பணமதிப்பிழப்பு என் தலைவிதியை முடித்து விடும் என்று பேசுகிறார்கள். அவர்களின் கனவு பலிக்காது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.