தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ஓடும் ரயில்களில் தீவிரவாதிகள் குண்டுகள் வைத்து தகர்க்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக 19 தீவிரவாதிகள் நாமநாதபுரத்தில் பதுங்கி உள்ளதாக வதந்தியை பரப்பிய லாரி டிரைவரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஓசூரில் இருந்து நேற்று பகலில் மர்ம ஆசாமி ஒருவர் போனில் பேசி திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி, தெலுங்கானா, மராட்டியம், கோவா உள்ளிட்ட மாநிலங்களில், முக்கியமான நகரங்களில் குண்டு வெடிப்பு நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக தென்னக ரெயில்களில் குண்டு வெடிக்கும் வாய்ப்பு அதிகம். இதற்காக ராமநாதபுரத்தில் 19 பயங்கரவாதிகள் நுழைந்துள்ளார்கள் என்ற தகவலை கூறிவிட்டு, அந்த மர்ம நபர் போனை வைத்துவிட்டார்.
இதனையடுத்து, பெங்களூரு போலீசார் தமிழ்நாடு உள்ளிட்ட மேற்கண்ட மாநிலங்களுக்கு எச்சரிக்கை செய்து கடிதம் அனுப்பினார்கள். கர்நாடக போலீசின் எச்சரிக்கையை தொடர்ந்து, தமிழக ரெயில்வே டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், ரெயில்வே டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் மேற்பார்வையில், தமிழகம் முழுவதும் ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளும், சோதனை நடவடிக்கைகளும் நேற்று முதல் தீவிரப்படுத்தப்பட்டது.
மேலும், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வாகன சோதனை, லாட்ஜ்களில் சோதனை, முக்கியமான பகுதிகளில் கண்காணிப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் வெடிகுண்டு வதந்தியை பரப்பிய சுந்தர மூர்த்தியை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். 65 வயதான சுந்தர மூர்த்தி தற்போது லாரி டிரைவராக உள்ளதாகவும், அவர் முன்னாள் ராணுவ வீரர் என்ற தகவல் தெரியவந்துள்ளது. வெடிகுண்டு வதந்தியை கிளப்பியதற்கு காரணம் என்ன? என்பது குறித்து அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.