இலங்கையின் கிழக்குப் பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுடன் அந் நாட்டு பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சண்டைக்குப் பின் அந்த வீட்டில் 6 குழந்தைகள் உள்பட 15 பேர் சடலமாக கிடந்தது தெரிய வந்துள்ளது. துப்பாக்கி சண்டையிலும் 5 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஏராளமான வெடிமருந்துகள் பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்புக்கு கிழக்கே 200 மைல் தொலைவில் உள்ள கல்முனை அருகிலுள்ள கம்மன் துறை என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் நேற்றிரவு சுற்றி வளைத்தனர். அப்போது வீட்டிற்குள் 3 முறை பயங்கர வெடிச்சத்தம் கேட்டதுடன், உள்ளிருந்து, பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியாலும் சரமாரியாக சுட்டனர்.
இதனால் நீண்ட நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் ஐஎஸ் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டமாக முதலில் தகவல் வெளியானது.
தற்போது துப்பாக்கிச் சண்டைக்குப் பின் அந்த வீட்டில் சோதனை நடத்திய போது 6 குழந்தைகள் உள்பட 15 பேரின் சடலங்கள் சின்னாபின்னமான நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் அறிவித்துள்ளனர்.
மேலும் அந்த வீட்டில் வெடி மருந்துகள் ஏராளமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெடிமருந்து களுடன் 150 ஜெலட்டின் குச்சிகள், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு சிறு இரும்பு குண்டுகள், மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தும் ஆடைகள், சீருடைகள் மற்றும் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் கொடிகள் உள்ளிட்டவை டெடுக்கப்பட்டதாக இலங்கை அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்ததும், வீட்டிற்குள் இருந்தவர்கள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து இருக்கலாம் என்றும், இறந்த 15 பேரில் தற்கொலைப்படையை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் துப்பாக்கி சண்டையிலும் 4 பயங்கரவாதிகளுடன் அப்பாவி பொது ஜனம் ஒருவரும் கொல்லப்பட்டனர்.