தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் ஃபனி புயலாக மாறுகிறது.
கோடை வெயிலின் தாக்கம் சுட்டெரித்து வரும் நிலையில், வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய வானிலை மையம் தற்போது வெளியிட்டுள்ள தகவலில், தென்கிழக்கு வங்கடலில் உருவான தாழ்வு மண்டலம், தொடர்ந்து வலுவடைந்து கொண்டே செல்கிறது. இந்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 1,210 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. மேலும், 20.கிமீ வேகத்தில் நகர்ந்து வரும் தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும். அதோடு, புயலாக மாறி வட தமிழகம் - தெற்கு ஆந்திரா கடற்கரையை நெருங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
அதனால், மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவேண்டாம் எனவும், கடலுக்கு சென்றவர்கள் நாளைக்குள் கரை திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஃபனி புயலை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில், அனைத்துத் துறை செயலாளர்களும் கலந்து கொண்டனர். மேலும், தமிழக கடலோர பகுதிகளுக்கும் அதனுடன், அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பை அதிகரிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகப் பேரிடர் மேலாண்மை ஆணையர் சத்யகோபால் தெரிவித்தார்.
ஃபனி புயலை எதிர்கொள்ள தமிழக அரசு அணைத்து கட்ட நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அரசுடன் இணைத்து மக்களும் புயலை எதிர்கொள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டியது அவசியம்.