அதிமுகவினர் பாண்டவர்கள் போல் சூதுவாது, சூழ்ச்சி தெரியாதவர்கள் என்றும், திமுகவை சகுனி என்றும் அமமுக துரியோதனன் என்றும் விமர்சித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.
தமிழக அரசியல் களத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போதைய அரசியல் களத்தில் தனிநபர் விமர்சனம், தரம் தாழ்ந்த வார்த்தைகள் பிரயோகம் என்பது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. நரகாசுரன், அரக்கன், விஷக்கிருமி, விஷ வாயு, மண்புழு, உதவாக்கரை, களவாணி, புறம்போக்கு போன்ற வார்த்தைகள் தலைவர்கள் அந்தஸ்தில் உள்ளவர்கள் களாலேயே உச்சரிப்பது சகஜமாகி விட்டது.
இந்த வகையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரும் சகுனி, துரியோதனன் என்று திமுக மற்றும் அமமுகவை விமர்சித்துள்ளார். 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் அவர்கள் கட்சிக்கும், ஆட்சிக்கும் எதிராக நடக்கும்போது அவர்கள் மீதான நடவடிக்கைகள் தவிர்க்க முடியாதது. மே 23-ந் தேதிக்கு பின் அமமுகவும், திமுகவும் நினைத்தது எதுவுமே நடக்காது.
அதிமுக என்ற பாண்டவர் அணியை சகுனி திமுகவும், துரியோதனன் அமமுகவும் சேர்ந்து ஏதும் செய்ய முடியாது. சகுனியான திமுக சூழ்ச்சி செய்யும். பாண்டவர்களான எங்களுக்கோ சூதுவாது, சூழ்ச்சி எதுவும் செய்யத் தெரியாது என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் முழுமையான அளவில் உள்ளது. சமூகத்திற்கு நண்பனாக இருப்பதே பத்திரிகைகளின் சிறந்த கடமையாக இருக்க முடியும். உலக பத்திரிகை சுதந்திர தினத்தையொட்டி அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் வாழ்த்துக்கள் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.