ராஜ்யசபா சீட் யாருக்கு...? மகனுக்கா? மருமகனுக்கா? மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கடி!

Rajya Sabha election, mk Stalins Son or son in law,who get mp seat in dmk, analysis

by Nagaraj, May 15, 2019, 11:54 AM IST

மக்களைவை மற்றும் 18 சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் ஒரு வாரத்தில் வெளியாக உள்ள நிலையில், ஜூலை மாதம் 6 ராஜ்யசபா இடங்களுக்கு நடைபெற உள்ள தேர்தலில் யாருக்கு அதிர்ஷ்டம் என்ற பேச்சுக்கள் இப்போதே எழத் தொடங்கி விட்டது. திமுகவில் கனிமொழியின் இடத்துக்கு மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதியா? மருமகன் சபரீசனா? என்ற போட்டா போட்டி இப்போதே தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுகவைச் சேர்ந்த, டாக்டர் மைத்ரேயன், அர்ஜுனன், லட்சுமணன், ரத்தினவேல்; திமுகவில் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.ராஜா ஆகிய 6 பேரின் ராஜ்யசபா எம்.பி பதவிக்காலம் வரும் ஜூலை 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் இந்த 6 இடங்களுக்கு யார் ?யார்? தேர்வாகப் போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழத் தொடங்கி விட்டது.

இந்த 6 இடங்களுக்கு தற்போதுள்ள எம்எல்ஏக்கள் அடிப்படையில் அதிமுகவுக்கு மூன்று எம்.பிக்களும், திமுகவுக்கு, இரண்டு எம்.பிக்களும் உறுதியாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ள 22 சட்டப்பேரவை தொகுதிகளின் முடிவுகளைப் பொறுத்து மீதமுள்ள ஒரு இடம் யாருக்கு என்பது தெரிந்துவிடும்.

ராஜ்யசபா தேர்தலில் ஒரு எம்பியை தேர்வு செய்ய 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. தற்போது கூட்டணியில் திமுகவுக்கு 88, காங்கிசுக்கு 8, முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு எம்எல்ஏ என மொத்தம் 97 பேர் உள்ளனர். இதனால் இடைத்தேர்தலில் 22 தொகுதிகளில் 5-ல் திமுக வென்றாலே மூன்றாவது ராஜ்யசபா எம்.பி. சீட்டும் உறுதியாகிவிடும்.

மக்களவைத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தையின் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் என்று ஒப்பந்தமாகியுள்ளது. அதே போல் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒரு சீட் தருவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக, திமுக, மதிமுக, பாமகவில் புதிதாக ராஜ்யசபா எம்பியாக தேர்வாகப் போவது யார் என்று இப்போதே கூட்டல் கழித்தல் கணக்குப் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

இந்தக் கணக்கில் பெரும்பாலும் வாரிசுகளுக்கே ராஜ்யசபா சீட் சென்றடையும் என்று தெரிகிறது. பாமகவில் தருமபுரியில் அன்புமணி ஜெயித்து விட்டால் அவருடைய மனைவி சௌமியா எம்பி ஆக்கப்படுவாராம். தோற்றுவிட்டால் அன்புமணி தான் ராஜ்ய சபா எம்.பி. என்று கூறப்படுகிறது. மதிமுகவில் வைகோ தான் எம்பி ஆவார் என்று கூறப்பட்டாலும், ஒருவேளை அவருடைய மகன் வையாபுரியை எம்பியாக்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லையாம்.

அதிமுகவில் பாமகவுக்கு ஒரு சீட் போக மீதமுள்ள 2 எம்பிக்கள் சீட்டுக்கு கடும் போட்டி என்று கூறப்படுகிறது. இதில் மைத்ரேயன் தனது இடத்தை தக்கவைக்கப் போராடுகிறாராம். மற்றொரு சீட்டுக்கு ஏகப்பட்ட அடிதடி உள்ள நிலையில், கரூரில் தோற்றுவிட்டால் எனக்குத் தான் அந்த சீட் என்று தம்பித்துரை துண்டு போட்டு வைத்துள்ளாராம்.

திமுகவில் மதிமுகவுக்குப் போக இரண்டில், கனிமொழி இடத்துக்கு மு.க.ஸ்டாலின் குடும்பத்தில் ஒருவருக்கு நிச்சயம் என்கிறார்கள். இதில் உதயநிதிக்கு கொடுக்க வேண்டும் என்பது ஸ்டாலின் குடும்பத்து கிச்சன் கேபினட் கெடுபிடி காட்டுகிறதாம். மற்றொரு தரப்பிலோ, டெல்லியில் திமுகவுக்காக திரைமறைவு வேலைகளைப் பார்க்க ஸ்டாலின் மருமகன் சபரீசன் தான் லாயக்கானவர் என்று உசுப்பேற்ற, யாரை தேர்வு செய்வது என்ற நெருக்கடியில் உள்ளாராம் மு.க.ஸ்டாலின் .

4 தொகுதிகள்...! 8 லட்சம் வாக்காளர்கள் ..! ஓட்டுக்கு ரூ.1000...! ரூ.80 கோடி பட்டுவாடா செய்த அமமுக

You'r reading ராஜ்யசபா சீட் யாருக்கு...? மகனுக்கா? மருமகனுக்கா? மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கடி! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை