எந்த அதிகாரமும் இல்லாமல் திமுக எதை சாதிக்க முடியும்? தோற்ற ராமதாஸ் கேள்வி!

by எஸ். எம். கணபதி, May 27, 2019, 09:03 AM IST

தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதால் தமிழகத்திற்கு எதை சாதிக்க முடியும்? என்று டாக்டர் ராமதாஸ் கேட்டிருக்கிறார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணி 37 இடங்களை கைப்பற்றியுள்ளது. வேலூரில் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை. அ.தி.மு.க. அணியில் பா.ம.க. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோற்றுள்ளது. இதனால், பெரும் ஏமாற்றம் அடைந்துள்ள

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேர்தல் முடிவுகள் எனக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், எந்தவித கவலையையோ, கலக்கத்தையோ ஏற்படுத்தவில்லை. அதற்குக் காரணம் பாட்டாளி சொந்தங்களாகிய நீங்கள் தான்.

மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்றிருந்தால், மத்தியில் மீண்டும் அமையவுள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசின் துணையுடன், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருப்போம். அது தமிழகத்தின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் நலனுக்கும் பெரும் பங்காற்றியிருக்கும். ஆனால், தேசிய அளவில் படுதோல்வி அடைந்து, தமிழகத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ள தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியால் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன நன்மைகளை செய்ய முடியும்?

மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோதே, தங்களை வளப்படுத்திக் கொண்டு மக்களுக்காக எதையும் செய்யாத தி.மு.க., இப்போது எந்த அதிகாரமும் இல்லாத சூழலில் எதை சாதிக்க முடியும்?. அந்த வகையில் பார்த்தால், தமிழகத்தில் அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணியின் தோல்வி மக்களின் தோல்வியாகவே அமைந்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் நாம் தோல்வியடைந்தாலும், கிட்டத்தட்ட கடந்த தேர்தலில் பெற்ற அளவுக்கு இப்போதும் வாக்குகளை வென்றுள்ளோம். இந்தத் தேர்தலின் முடிவுகள் குறித்து ஆத்ம பரிசோதனை செய்வோம்; நம்மை நாமே மேலும் வலுப்படுத்திக் கொண்டு மீண்டும் களத்திற்கு செல்வோம்; வெற்றி பெறுவோம்.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Get your business listed on our directory >>More Politics News

அதிகம் படித்தவை