தமிழக அரசியலில் தற்போது டி.டி.வி. பரபரப்பு ஓய்ந்து, ஸ்டாலின் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது.
ஆம். ‘‘அதிமுகவில் உள்ள ஸ்லீப்பர் செல்கள் திடீரென வெளியே வரும், எடப்பாடி ஆட்சி கவிழும்’’ என்று டி.டி.வி. தினகரன் சொல்லிக் கொண்டே இருக்க, தமிழக மக்களும் ஆவலுடன் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்தனர். ஆனால், கடைசி வரை அது நடக்காமல் போனதுடன், டி.டி.வி.யின் அ.ம.மு.க.வில் மிகவும் வேகமாக பேசியவர்கள் எல்லாம் வரிசையாக கழன்று செல்கிறார்கள்.
ஆனால், இப்போது அந்த இடத்தை ஸ்டாலின் நிரப்புகிறார். தினம்தினம் இந்த ஆட்சியின் முடிவு வந்து விட்டது, நாட்கள் எண்ணப்படுகின்றன என்று ஆரம்பித்து, கடைசியாக ‘புலி பதுங்குவது பாய்வதற்குத் தான்’ என்று கூறியுள்ளார். அதாவது, சபாநாயகர் மீது தி.மு.க. கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்தாமல் விட்டதற்கு காரணமாக இந்த வார்த்தைகளை சொல்லியிருக்கிறார்.
அதன் பொருள் என்ன? சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்து அது தோல்வியுற்றால் எடப்பாடி அரசுக்கு பெரும்பான்மை இருப்பது உறுதியாகி விடும். அடுத்த ஆறு மாதங்களுக்கு எடப்பாடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது சாத்தியமாகாது. அதே சமயம், இப்போது சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விட்டு விட்டால், எந்த நேரத்திலும் எடப்பாடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரலாம். தற்போது மதில் மேல் பூனையாக உள்ள எம்.எல்.ஏ.க்களை கொண்டு, நம்பர் கேம் விளையாடத் தொடங்கினால், அப்போது எடப்பாடி மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வெற்றி பெற வைக்கவும் வாய்ப்பிருக்கிறது.
எப்படி தெரியுமா? தற்போது வசந்தகுமார் ராஜினாமா செய்த நாங்குனேரி, மறைந்த தி.மு.க உறுப்பினர் ராதாமணியின் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளன. எனவே, தற்போது சட்டசபையின் மொத்த பலம் 232.
இதில், தி.மு.க.வுக்கு 100 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரசுக்கு 7 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். எடப்பாடி அரசுக்கு எதிராக, டி.டி.வி.தினகரன், அவரை ஆதரிக்கும் ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் என்று 4 பேரும், மதில்மேல் பூனைகளாக தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகிய மூவரும் உள்ளனர். இவர்களையும் அரசுக்கு எதிராக கொண்டால், 114 பேர் இருக்கிறார்கள்.
எனவே, 232ல் இந்த 114ஐ கழித்தால் 118 தான் வருகிறது. இதிலும் சபாநாயகரை கழித்தால் 117 தான். அதாவது சட்டசபையில் வாக்கெடுப்பு நடந்தால், மெஜாரிட்டியான 116ஐ விட ஒன்றே ஒன்றுதான் கூடுதலாக இருக்கிறது.
இந்த சூழலில் அ.தி.மு.க.வுக்குள் பல எதிர்ப்பு குரல்கள் வெளியே தெரியாமல் ஒலித்து கொண்டே இருக்கின்றன. உதாரணமாக, தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ.வை எடுத்து கொள்ளுங்கள். அவர் சசிகலா அணியில் இருந்தவர். தினகரன் திகாரில் இருந்து ஜாமீனில் வந்த போது பிரம்மாண்ட வரவேற்பு அளித்தவர்களில் ஒருவர். அதன்பிறகு, தினகரனை விட்டு அதிமுகவுக்கு வந்தார். அதற்கு முன்பே ஈரோடு மாவட்ட அமைச்சர் கருப்பணனிடம் இருந்து அமைச்சர் மற்றும் மா.செ. பதவியை பறிக்க கோரிக்கை விடுத்து வந்தார். அதற்காக சட்டமன்றக் குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
கடைசியாக, நாடாளுமன்றத் தேர்தலின் போது அமைச்சர் கருப்பணனுக்கு எதிராக கடுமையாக மோதினார்.
அவரிடம் இருந்து அமைச்சர் மற்றும் மா.செ. பதவியை பறித்து அதில் ஒன்றையாவது தனக்கு தர வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி ெகாடுத்தார். நாடாளுமன்றத் தேர்தலில் திருப்பூர் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு எதிராக அமைச்சர் கருப்பணன் உள்ளடி வேலை பார்ப்பதாக பகிரங்கமாக தோப்பு வெங்கடாச்சலம் குற்றம்சாட்டினார். தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணுவதற்கு முன்பாக எடப்பாடியைச் சந்தித்து அம்மா பேரவை துணைச் செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தார். இதன்மூலம், தனது அதிருப்தியை வெட்டவெளிச்சமாக்கினார்.
அவரை தற்காலிகமாக சமாதானம் செய்த முதலமைச்சர், அவருக்கு தேர்தல் முடிவு வந்த பிறகு மா.செ. பதவி அல்லது அமைச்சர் பதவி தருவதாக உறுதியளித்திருக்கிறார். ஆனால், எதுவும் செய்யவில்லை. இந்நிலையில், சட்டசபையும் கூடி விட்டது. தான் கேட்டது எதுவும் கிடைக்காது என்று தெரிந்தவுடன் தோப்பு வெங்கடாச்சலம் நேற்று(ஜூன்30) தனது பலத்தைக் காட்டி எடப்பாடிக்கு மறைமுக மிரட்டல் விடுத்திருக்கிறார்.
அதாவது, பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற கோரி, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை திரட்டி கொண்டு ஊர்வலமாக சென்ற தோப்பு வெங்கடாசலம் ஈரோடு கலெக்டரிடம் நேற்று மனு அளித்தார். எனவே, அவர் தனக்கு மா.செ. அல்லது மந்திரி பதவி கிடைக்காவிட்டால், ஆட்சியை கவிழ்க்கவும் தயாராகலாம்.
தோப்பு வெங்கடாசலம் தற்போது பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர். கடந்த தேர்தல்களில் இந்த தொகுதியை திமுக பெரும்பாலும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குத்தான் விட்டு கொடுத்திருக்கிறது. எனவே, தோப்பு வெங்கடாசலம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு திமுகவுக்கு தாவினால், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியைப் போல், அவர் மீண்டும் பெருந்துறை எம்.எல்.ஏ.வாக வாய்ப்பிருக்கிறது.
இதே போல், ராஜன் செல்லப்பா உள்ளிட்ட வேறு சில அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் எம்.எல்.ஏ. சீட், மேயர் பதவி போன்ற ஆசைகளைக் காட்டி தி.மு.க. தன் பக்கம் இழுத்தால் அவ்வளவுதான்! எடப்பாடி அரசு தானாகவே கவிழ்ந்து விடும். இந்த முறை பா.ஜ.க.வும் அந்த அரசை காப்பாற்ற நினைக்காது. ஏனெனில், தமிழகத்தில் தங்கள் மீதான அதிருப்திையக் குறைத்தால்தான் அடுத்து கட்சியை வளர்க்க முடியும் என்று பா.ஜ.க. தலைமை கருதுகிறது.
அதனால்தான், மும்மொழித் திட்டம், ரயில்வேயில் தமிழ் போன்ற விஷயங்களில் உடனடியாக முடிவை மாற்றிக் கொண்டது. அதனால், அ.தி.மு.க.வை தாங்கிப் பிடிக்கும் முடிவையும் மாற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.
இந்த சூழ்நிலையில்தான், புலி பதுங்குவது பாய்வதற்காகத்தான் என்றும், சட்டசபை இப்போதுதானே துவங்கியிருக்கிறது, என்ன நடக்கும் என்பதை யாமறியேன் பராபரமே என்றும் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார். எனவே, ஆட்சி தானாக கவிழவும் வாய்ப்புள்ளது. திமுக முயற்சியால் கவிழவும் வாய்ப்புள்ளது. பாஜக கைகழுவினால் கவிழவும் வாய்ப்புள்ளது.