சென்னை அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் குதிக்க, சென்னைவாசிகள் பரிதவித்து விட்டனர்.
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் பெருத்த நஷ்டத்தில் இயங்குவதால் ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதியம் முறையாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது. அதே போல் ஓய்வு பெறும் ஊதியர்களுக்கும் வழங்க வேண்டிய பணமும் மொத்தமாக வழங்கப்படாமல் தவணை முறையில் வழங்கப்படுவதாகவும் ஊழியர்கள் புலம்புகின்றனர்.
இந்நிலையில் ஊழியர்கள் மாதச் சம்பளத்தையும் தவணை முறையில் வழங்கிய அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம், கடந்த மாதத்துக்குரிய 40 சதவீத ஊதியத்தை இன்னமும் வழங்கவில்லையாம். அத்துடன் நேற்று வழங்க வேண்டிய மாதச் சம்பளமும் பட்டுவாடா செய்யப்படாததால், சென்னையில் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் இன்று அதிகாலை முதல் திடீர் வேலை நிறுத்தத்தில் குதித்தனர்.
பணிமனை முன் அமர்ந்து ஊழியர்கள் போராட்டத்திலும் குதித்தனர். அரசு ஆதரவு அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் சிலர் பேருந்துகளை இயக்க முன் வந்த போது அதையும் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தடுத்தனர். இதனால் பணிமனைகள் முன்பு ஊழியர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பதற்றம் நிலவியது.
போக்குவரத்து ஊழியர்களின் இந்த திடீர் போராட்டத்தால் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் வாரத்தின் முதல் நாளான இன்று, பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்தவர்களும் உரிய இடங்களுக்கு செல்ல முடியாமல் பரிதவித்தனர்.
இந்நிலையில் மாதத்தின் கடைசி நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், வங்கிகள் விடுமுறை காரணமாகவே சம்பளம் பட்டுவாடா செய்ய முடியாமல் போய்விட்டது என போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கமளித்துள்ளார். இன்று மாலைக்குள் ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு விடும் என்று உறுதியளித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஊழியர்கள் அனைவரும் உடனே பணிக்குத் திரும்ப வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.