அத்திவரதரை 40 ஆண்டுக்கு பின் குளத்தில் இருந்து எடுப்பது ஏன்?

Why swamy atthivaradhar gives dharsan once in 40 years?

by எஸ். எம். கணபதி, Jul 1, 2019, 12:36 PM IST

பல்வேறு சிறப்புகளை கொண்ட காஞ்சிபுரத்தில், பக்தர்களுக்கு இடையறாது வரங்களை அள்ளித் தரும் வரதராஜப் பெருமாள் கோயில் இருக்கிறது. உலகம் முழுவதும் எத்தனையோ பெருமாள் கோவில்கள் இருந்தாலும், ‘பெருமாள் கோவில்’ என்றால், அது காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலை மட்டுமே குறிக்கும் என்ற அளவுக்கு இந்தக் கோவில் பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.

வரதராஜப் பெருமாள் கோவிலின் கிழக்கு கோபுரம் 125 அடி உயரத்தில் வானுயர்ந்து நிற்கிறது. மேற்கு ராஜகோபுரத்தின் உயரம் 96 அடி. 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோவிலில் 19 விமானங்கள் உள்ளன. இந்த கோவில், 1018-1053-ம் ஆண்டுகளில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. தெலுங்கு சோழர்கள், பாண்டிய மன்னர்கள், ஹொய்சாள மன்னர்கள், சேர மன்னர்கள் உள்பட பல மன்னர்களால் விரிவுபடுத்தப்பட்டு, இப்போது பிரமாண்டமாகக் காட்சி அளிக்கிறது.

இந்தக் கோவில் உருவானது தொடர்பாகவும், கோவில் குளத்தில் 40 ஆண்டுகளாக அத்திவரதர் மூழ்கி இருப்பது பற்றியும் கூறப்படும் புராணச் செய்திகளில் பல தகவல்கள் அடங்கி இருக்கின்றன.

தேவலோகச் சிற்பியான விஸ்வகர்மாவை அழைத்த பிரம்மா, தான் மிகப் பெரிய யாகம் ஒன்றை நடத்த இருப்பதாகவும், அதற்குத் தகுந்த அழகிய நகரை அமைத்துத் தருமாறும் கேட்டுக் கொண்டார். அவர் கேட்டுக் கொண்டபடி உருவாக்கப்பட்டதுதான், இப்போது வரதராஜப் பெருமாள் குடிகொண்டுள்ள இடம்.

உலகைப் படைத்த பிரம்மா, இந்த உலகில் மகாவிஷ்ணு நிரந்தரமாக தங்கி இருக்க வேண்டும் என்று விரும்பினார். இந்த கோரிக்கையை முன்வைத்தே பிரம்மா, அஸ்வமேத யாகம் நடத்தினார்.

அந்த சமயத்தில் பிரம்மாவுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்த சரஸ்வதி, “இந்த யாகத்தில் பங்குகொள்ள முடியாது” என்று கூறிவிட்டார். இதனால், பிரம்மா, தனது மற்ற துணைவியர்களான காயத்ரி, சாவித்ரி ஆகியோரை அழைத்து வந்து யாகத்தை மேற்கொண்டார். இதை அறிந்த சரஸ்வதி, கோபம் கொண்டு ‘வேகவதி’ ஆறாக பெருக்கெடுத்து வந்து யாகத்தை அழிக்க முயன்றார்.

அப்போது, யாகத்தை காப்பாற்றுவதற்காக மகாவிஷ்ணு, அந்த ஆற்றின் குறுக்கே படுத்து அதனை தடுத்து நிறுத்தி விட்டார். இதனால் பிரம்மாவின் யாகம் எந்த பாதிப்பும் இல்லாமல் நிறைவேறியது.

யாகத்தின் இறுதியில், அந்த வேள்வித் தீயில் இருந்து மகாவிஷ்ணு, லட்சுமி தேவியுடன் வரதராஜ பெருமாளாகத் தோன்றினார். பிரம்மாவின் விருப்பத்தை ஏற்று இங்கேயே நிரந்தரமாகத் தங்கி பக்தர்களுக்கு வேண்டும் வரத்தை வழங்குவதாகவும் கூறினார்.
அந்த யாகத்தீயில் இருந்து, அத்தி மரத்தால் ஆன உருவத்துடன் தோன்றியவர் தான், இப்போது அனைத்து பக்தர்களாலும் போற்றி வணங்கப்படும் அத்தி வரதர் ஆவார்.
அந்த அத்தி வரதர், 40 ஆண்டுகளாக குளத்தில் மூழ்கிய நிலையில் வைக்கப்பட்டு, 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வெளியே எடுத்து பூஜிக்கப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

யாகத்தீயில் இருந்து வெளியே வந்தபோது அத்தி வரதர், தீயில் கருகி சற்று பின்னப்பட்டு விட்டதாகவும், சேதம் அடைந்த சிலையை மூலவர் சன்னிதியில் வைக்க வேண்டாம் என்று முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

யாக வேள்வியில் இருந்து வந்தபோது தன்னை அதிக வெப்பம் தாக்கியதால், தன்னை குளிர்விப்பதற்காக ஒரு குளத்தில் 40 ஆண்டுகள் மூழ்க வைத்து, அதன் பிறகு 48 நாட்கள் பூஜித்து மீண்டும் 40 ஆண்டுகள் குளத்தில் வைத்து விட வேண்டும் என்று அத்தி வரதர் கேட்டுக் கொண்டதாகவும் ஒரு செய்தி கூறுகிறது.

அன்னியர்கள் படையெடுப்பின்போது, அத்தி வரதரை காப்பாற்ற, அந்த சிலையை கோவில் குளத்தில் பத்திரமாக மூழ்க வைத்து இருந்ததாகவும், 40 ஆண்டுகளுக்குப் பிறகு அத்தி வரதர் வெளியே எடுக்கப்பட்டதாகவும், அதே முறை இப்போதும் தொடர்ந்து கடைப்பிடிக்கப் படுகிறது என்றும் சிலர் சொல்கிறார்கள்.

1688-ம் ஆண்டு அவுரங்கசீப் ஆட்சி காலத்தில், அத்தி வரதர் சிலையை பாதுகாக்க காஞ்சிபுரத்தில் இருந்து அதனை எடுத்துச் சென்று, திருச்சி அருகே உடையார் பாளையத்தில் மறைத்து வைத்து இருந்து, 1710-ம் ஆண்டு மீண்டும் காஞ்சிபுரத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அத்தி வரதர் பல ஆண்டுகளாக வரதராஜப் பெருமாள் கோவிலின் மூலவர் சன்னிதியில் இல்லை என்பது மட்டும் உறுதி. அத்தி வரதருக்குப் பதிலாக, காஞ்சிபுரத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பழைய சீவரம் என்ற ஊரில் உள்ள மூலவரை எடுத்து வந்து வரத ராஜப்பெருமாள் கோவிலில் வைத்து இருக்கிறார்கள். இவரை ஆண்டுதோறும் தை மாதத்தில் பழைய சீவரம் ஊருக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்று பூஜைகள் செய்த பிறகு மீண்டும் காஞ்சிபுரத்திற்கு கொண்டுவந்து விடுகிறார்கள்.

யாகத்தீயில் உருவான அத்தி வரதர் சிலை 10 அடி உயரம் கொண்டது ஆகும். முழுக்க அத்தி மரத்தால் உருவான இந்த சிலை, பெரிய வெள்ளிப் பேழையில் வைத்து மூடப்பட்டு, வரதராஜப் பெருமாள் கோவிலின் குளத்தில் மூழ்கிய நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஆலயத்தில் அனந்தசரஸ் திருக்குளம், பொற்றாமரை திருக்குளம் ஆகிய இரண்டு குளங்கள் இருக்கின்றன. மேற்கு ராஜ கோபுரத்திற்கு வடமேற்கில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில், சிறிய விமானத்துடன் கூடிய நாலுகால் மண்டபம் உள்ளது. இதன் அருகே தான் அத்தி வரதர் வெள்ளிப்பேழையில் தண்ணீருக்குள் மூழ்கிய நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறார்.

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்தக் குளத்தில் உள்ள தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றிவிட்டு, அங்குள்ள வெள்ளிப் பேழையை வெளியே எடுப்பார்கள்.
அதற்குள் இருக்கும் அத்திவரதர், 48 நாட்களில் 24 நாட்கள் சயனக் கோலத்திலும் 24 நாட்கள் நின்ற கோலத்திலும் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த அரிய நிகழ்வு மிகச் சரியாக 40 ஆண்டுகளுக்கு ஒரு முறையே நடை பெறும்.

கடந்த 1939-ம் ஆண்டு திருக்குளத்தில் இருந்து வெளியே வந்த அத்தி வரதர், அதன் பிறகு 1979-ம் ஆண்டு ஜூலை 2-ந் தேதி வெளியே எடுக்கப்பட்டார்.

இப்போது 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 1ம் தேதி முதல் வரதராஜர் கோயில் வசந்த மண்டபத்தில் பக்தர்களுக்கு அத்திவரதர் தரிசனம் கொடுத்து வருகிறார். இந்த பெருவிழா 48 நாட்களுக்கு நடைபெற இருக்கிறது.

You'r reading அத்திவரதரை 40 ஆண்டுக்கு பின் குளத்தில் இருந்து எடுப்பது ஏன்? Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை