கர்நாடக எம்எல்ஏக்கள் மும்பையில் தஞ்சம்..! பாஜக எம்.பி.யின் தனி விமானத்தில் பயணம்

Karnataka political crisis, Cong, JDU MLAs flown to Mumbai by BJP MPs flight

by Nagaraj, Jul 7, 2019, 14:03 PM IST

கர்நாடகாவில் மீண்டும் ஒரு அரசியல் கலாட்டா ஆரம்பமாகியுள்ளது. குமாரசாமியின் ஆட்சியைக் கவிழ்க்க இந்த முறை பாஜக பக்காவாக பிளான் போட்டு விட்டதால், ஆட்சி அம்பேல் ஆவது உறுதி என்றே தெரிகிறது.


கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு அமைந்து ஓராண்டு தான் நிறைவு பெற்றுள்ளது.
ஆனால், குமாரசாமி ஆட்சி அமைந்தது முதலே நித்ய கண்டம் பூரண ஆயுசு என்பது போல, குழப்பம் மேல் குழப்பம் ஏற்பட்டு, இந்த ஒரு வருட காலத்தில் குமாரசாமி அரசு சந்திக்காத நெருக்கடியே இல்லை எனலாம். அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அவ்வப்போது போர்க்கொடி தூக்குவதும், பின்னர் சமாதானமாவதும் என நாட்களை கடத்தினர்.பாஜகவும் பல முறை ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் பல முறை ஈடுபட்டு தோல்வி கண்டது.


இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் ஆளும் காங்-மஜத கூட்டணி படுதோல்வி அடைய, பாஜகவோ அமோக வெற்றி பெற்று விட்டது. இதையடுத்து குமாரசாமி ஆட்சி தானாகவே கவிழும். ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் பாஜக ஈடுபடாது என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறினாலும், பாஜக ரகசியமாக பெரும் மாஸ்டர் பிளான் போட்டுவிட்டது என்றே கூறலாம். காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களில் கணிசமானோரை ராஜினாமா செய்ய வைத்து, குமாரசாமி அரசை பெரும்பான்மை இல்லாமல் ஆக்குவதுதான் எடியூரப்பாவின் மாஸ்டர் பிளானாக இருந்தது. அந்த பிளான் ஒர்க் அவுட் ஆகி தற்போது கர்நாடக அரசியலில் மாபெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.


காங்கிரஸ் கட்சியின் மூத்த முன்னாள் அமைச்சரும் 7-வது முறையாக எம்எல்ஏவாகவும் இருந்து வரும் ராமலிங்கா ரெட்டி தலைமையில், 11 காங்கிரஸ் எம்எல்ஏக்களும், 2 மஜத எம்எல்ஏக்களும் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து, சபாநாயகர் அலுவலகம் முன் அணிவகுத்தனர். ஆனால் சபாநாயகர் ரமேஷ்குமாரோ அலுவலகம் பக்கம் தலை காட்டாததால் ' சபாநாயகரின் செயலாளரிடம் கடிதம் கொடுத்தனர். பின்னர் ஊர்வலமாகச் சென்று ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் முறையிட்டனர்.


இதற்கிடையே எம்எல்ஏக்கள் ராஜினாமா முயற்சிகளை தடுத்து, அவர்களை சமாதானம் செய்ய காங்கிரஸ் தலைவர்களும் தீவிரமாக இறங்கினர். துணை முதல்வர் பரமேஸ்வரா, நீர்ப்பாசன அமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் அதிருப்தி எம்எல்ஏக்களை சந்தித்து தாஜா செய்து பார்த்தனர். எம்எல்ஏக்களிடம் இருந்த ராஜினாமா கடிதங்களை பிடுங்கி அமைச்சர் சிவக்குமார் கிழித்தெறிந்ததும் சர்ச்சையானது.


இதனால் ஆளுநர் மாளிகையில் இருந்து ராமலிங்கா ரெட்டி உள்ளிட்ட 12 எம்எல்ஏக்கள் நேராக விமான நிலையத்துக்கு பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்பட்டு தனியாருக்குச் சொந்தமான தனி விமானத்தில் மும்பைக்கு பறந்தனர். இந்த ஏற்பாடுகளைச் செய்தது முழுக்க பாஜகவினரின் கைங்கர்யம் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.


முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் தனி உதவியாளரான சந்தோஷ், பாஜக எம்எல்ஏக்கள் அஸ்வத் நாராயணா, யோகேஸ்வர் ஆகியோர் தான் ஆளுநர் மாளிகையில் இருந்து எம்எல்ஏக்களை பத்திரமாக அழைத்துச் சென்றுள்ளனர். எம்எல்ஏக்கள் சென்ற தனியார் விமானமும் பாஜக எம்.பி. ராஜீவ் சந்திரசேகர் என்பவரின் ஜுபிடர் கேபிடல் நிறுவனத்துக்கு சொந்தமானது என்று தகவல் வெளியாகியுள்ளது. மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்ட காங்கிரஸ் - மஜத எம்எல்ஏக்கள் 12 பேரும் பாந்த்ரா பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


எனவே கர்நாடகத்தில் ஆளும் குமாரசாமி அரசை கவிழ்த்தே தீருவது என்பதில் பாஜக மும்முரமாகிவிட்டது என்பது உறுதியாகிவிட்டது. தற்போதைய குழப்பங்களுக்கும் பாஜகவின் கைங்கர்யங்கள் தான் காரணம் என்பதும் வெட்ட வெளிச்சமாகி விட்டது. இதற்கிடையே அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் குமாரசாமியும், லண்டன் சென்றுள்ள கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவும் அவசரமாக பெங்களூரு திரும்புகின்றனர்.


எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்திலும் சபாநாயகர் ரமேஷ்குமார் இன்னும் முடிவு எடுக்காத நிலையில், அடுத்த சில நாட்களில் கர்நாடக அரசியலில் மேலும் பல திருப்பங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading கர்நாடக எம்எல்ஏக்கள் மும்பையில் தஞ்சம்..! பாஜக எம்.பி.யின் தனி விமானத்தில் பயணம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை