கட்சி தாவி வந்தவர்களை அமைச்சராக்கும் முதல்வர் கோவா பாஜகவின் உபசரிப்பு

New ministers swearing-in today: Goa CM Pramod Sawant asks 4 ministers to resign

by எஸ். எம். கணபதி, Jul 13, 2019, 10:23 AM IST

கோவாவில் 4 அமைச்சர்களை கழட்டி விட்டு, காங்கிரசில் இருந்து வந்தவர்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்குகிறார் அம்மாநில பாஜக முதலமைச்சர் பிரமோத் சவந்த். புதிய அமைச்சர்கள் பதவியேற்பு இன்று மாலை நடக்கிறது.

கோவாவில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் 17 தொகுதிகளில் வென்றது. பாஜக 15ல் மட்டுமே வென்றிருந்தது. எனவே, 3 சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க காங்கிரஸ் முயன்றது. ஆனால், காங்கிரசை விட வேகமாக செயல்பட்ட பாஜக, கோவா பார்வர்ட் கட்சியின் 3 எம்எல்ஏக்கள் மற்றும் 3 சுயேச்சை எம்எல்ஏக்களை இழுத்து ஆட்சி அமைத்தது.

அப்போது, கோவா பார்வர்ட் கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாய் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். அந்த கட்சியின் மற்ற 2 எம்எல்ஏக்களுக்கும் அமைச்சர் பதவி தரப்பட்டது. முதலமைச்சர் மனோகர் பரிக்கர் மறைவுக்குப் பின்னர் குழப்பம் ஏற்பட்டது. கடைசியில், பாஜகவின் பிரமோத் சாவந்த் முதல்வராக பொறுப்பேற்றார்.

இவருடைய அமைச்சரவையிலும் விஜய் சர்தேசாயுடன், பாஜகவின் மனோகர் அஜான்கரும் துணை முதல்வர்களாக பொறுப்பேற்றனர். அதன்பின்பு, காங்கிரசின் 2 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்ததால் அக்கட்சியின் பலம் 17 ஆக உயர்ந்தது. கடந்த வாரம், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10 பேர் நேற்று பாஜகவில் இணைந்து விட்டனர். இதனால் பாஜக 27 எம்எல்ஏக்களுடன் மெஜாரிட்டி பலம் பெற்றுள்ளது.

இதைத் தொடர்ந்து, கோவா பார்வர்ட் கட்சியை கழட்டி விட பாஜக தீர்மானித்தது. அதன்படி, துணை முதல்வர் விஜய்சர்தேசாய் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த வினோதா பலிங்கர், ஜெயஷே் சலோகர் ஆகியோரையும், சுயேச்சை உறுப்பினர் ரோகன் கவுந்தேவையும் அமைச்சர் பதவியில் இருந்து முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அதிரடியாக நீக்கி விட்டார்.

தற்போது இவர்களுக்கு பதிலாக, இதுவரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்து காங்கிரசில் இருந்து கட்சி தாவி வந்த சந்திரகாந்த் கவ்லேகர், அட்டானாசியோ பாபுஷ், பிலிப் நேரி ரோட்ரிக்ஸ் ஆகியோரையும், துணை சபாநாயகர் மைக்கேல் லோபோவையும் புதிய அமைச்சர்களாக சாவந்த் நியமித்துள்ளார். இந்த புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா, இன்று மாலை 3 மணியளவில் கோவா கவர்னர் மாளிகையில் நடைபெறவுள்ளது.
இது குறித்து, பாஜகவினர் கூறுகையில் ‘‘கோவா பார்வர்ட் கட்சியின் 3 பேரும் ஆட்சிக்கு மிரட்டல் விடுத்து வந்தனர். அவர்கள் காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சியமைக்க முயற்சி செய்வார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதனால்தான், காங்கிரசில் இருந்து 10 எம்எல்ஏக்களை தூக்கி விட்டோம். இப்போது காங்கிரசில் வெறும் 5 பேர் மட்டுமே உள்ளதால் இனி ஆட்சிக்கு ஆபத்து வராது’’என்றனர்.

கோவா அமைச்சரவையில் மாற்றமா..? கூட்டணி கட்சி து.முதல்வர் கொந்தளிப்பு

You'r reading கட்சி தாவி வந்தவர்களை அமைச்சராக்கும் முதல்வர் கோவா பாஜகவின் உபசரிப்பு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை