வேலைவாய்ப்பில் 75% ஒதுக்கீடு ஆந்திராவில் புதிய சட்டம் அமல் தமிழகம் பின்பற்றுமா?

Andhra Pradesh Assembly passes bill on 75% quota for local youth

by எஸ். எம். கணபதி, Jul 25, 2019, 13:34 PM IST

ஆந்திராவில் உள்ள தொழிற்சாலைகள், நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் 75 சதவீதம், அம்மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கே வழங்க வேண்டுமென்று புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

ஆந்திராவில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. இந்த அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு புதிய சட்டங்களை இயற்றி வருகிறது. அதில் ஒன்றாக, ஆந்திராவில் அமைக்கப்படும் அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பில் 75 சதவீதத்தை உள்ளூர் மக்களுக்கே வழங்க வேண்டுமென்று சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தாலும் புதிய சட்டமசோதாவை நேற்றுதான்(ஜூலை24) சட்டமன்றத்தில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் ஜெயராம் தாக்கல் செய்தார். முக்கிய எதிர்க்கட்சியான தெலுங்குதேசம் கட்சியின் உறுப்பினர்கள் யாரும் அவையில் இல்லை. அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு விவசாயக் கடன்கள் தொடர்பாக பேச வாய்ப்பு அளிக்காததால், அக்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருந்தனர்.

சட்டம் குறித்து முதலமைச்சர் ஜெகன் மோகன் கூறுகையில், ‘‘இந்த சட்டத்தின்படி தொழிற்சாலைகளில் 75 சதவீத வேலைவாய்ப்பு உள்ளூர் மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும். உள்ளூர் என்றால் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொருள். வேலைவாய்ப்பில் தகுதி படைத்தவர்கள் இல்லாவிட்டால், இளைஞர்களுக்கு அதற்கான பயிற்சிகளை அளிக்கும் பணியை அரசின் தொழிலாளர் நலன் துறை மேற்கொள்ளும். இந்த சட்டத்தால், தொழிற்சாலைகளுக்கு எந்தப் பிரச்னையும் வராது’’ என்றார்.

தொழிலாளர் அமைச்சர் ஜெயராம் கூறுகையில், ‘‘அரசு மற்றும் தனியார் கூட்டு நிறுவனங்களில் இந்த சட்டம் உடனடியாக அமல்படுத்தப்படும். தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரை இனிமேல் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு பொருந்தும். உள்ளூர் மக்களில் தகுதிபடைத்தவர்கள் கிடைக்காவிட்டால், அந்த நிறுவனங்கள் சட்டத்தில் விலக்கு கோரலாம். அதை அரசு பரிசீலித்து 2 வாரங்களுக்குள் அனுமதி வழங்கும்’’ என்றார். புதிய சட்டம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.

ஏற்கனவே மகாராஷ்டிரா, கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம் உள்பட பல மாநிலங்களில் இதே போல் வேலைவாய்ப்பில் மாநில மக்களுக்கு ஒதுக்கீடு வழங்கும் சட்டம் உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் 85 சதவீத ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்த ஆண்டு பொறுப்பேற்ற கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கொண்டு வந்திருக்கிறது.
ஆனால், தமிழகத்தில் இது போன்ற சட்டம் இல்லை என்பதுடன் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்க வேண்டியுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அரசு பணிகளுக்கான தேர்வில் வெளிமாநிலத்தவர்களும் பங்கேற்கலாம் என்று சமீபத்தில் எடப்பாடி அரசு தேர்வாணையச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது. அதனால், தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலைவாய்ப்பு என்பது பறிபோய், வெளிமாநிலத்தவர்கள் அதிகமாக பணியாற்றும் மாநிலமாக மாறி விடும் அபாயம் உள்ளது. இதை ஏற்கனவே மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆந்திராவைப் போல் சட்டம் கொண்டு வரவும் எடப்பாடி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனங்கள் ரத்து; புதிய திட்டம் தயார்

You'r reading வேலைவாய்ப்பில் 75% ஒதுக்கீடு ஆந்திராவில் புதிய சட்டம் அமல் தமிழகம் பின்பற்றுமா? Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை