திமுக வேட்பாளரை ஆதரித்து அனுமதியின்றி, திருமண மண்டபத்தில் பிரச்சாரக் கூட்டம் நடத்தியதாக அக்கட்சித் தலைவர் ஸ்டாலின், வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோர் மீது ஆம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளர் கதிர்ஆனந்தை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று காலை, 10:00 மணிக்கு ஆம்பூர் மோட்டுக்கொல்லையில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலைக்குள் சென்று வாக்குசேகரித்தார்.
இதன்பின், ஆம்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், இஸ்லாமிய தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்று, தி.மு.க., வேட்பாளர், கதிர்ஆனந்துக்கு வாக்கு சேகரித்தார்.
இந்த கூட்டம் நடத்துவதற்கு உரிய அனுமதி பெறவில்லை என்று கூறி, அ.தி.மு.கவினர், தேர்தல் அதிகாரிகளிடம் புகார் செய்தனர். ஆளும்கட்சி சொல்லி விட்டதால், பறக்கும் படை தேர்தல் அதிகாரிகள் வேக, வேகமாக அந்த மண்டபத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து, அந்த திருமண மண்டபத்திற்கு தேர்தல் அதிகாரிகள், 'சீல்' வைத்தனர். மண்டப உரிமையாளர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறி, தோல் தொழிற்சாலைக்குள் சென்று ஸ்டாலின் ஓட்டு கேட்டார் என்றும், அ.தி.மு.க., வினர் புகார் செய்தனர். இது தொடர்பாகவும் விசாரணை நடத்திய தாசில்தார் சுஜாதா, ஆம்பூர் நகர போலீசில் புகார் கொடுத்தார். புகாரை ஏற்றுக் கொண்ட போலீசார், திமுக தலைவர் ஸ்டாலின், அக்கட்சி வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஆபரேஷன் லோட்டஸ்; அதிமுகவை உடைக்க பாஜக திட்டமா?