நமது அண்டை நாடான சின்னஞ்சிறிய பூடான் நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பள மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற மோடி, நமது அண்டை நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை முக்கியத்துவமாக கொண்டுள்ளார். பதவியேற்ற சில நாட்களிலேயே மாலத்தீவு, இலங்கை ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து கிர்கிஸ்தான் நாட்டில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றார். அங்கு சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் முக்கியப் பேச்சுவார்த்தையும் நடத்தினார்.
இந்நிலையில் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி இன்று பூடான் சென்றார். பூடானின் பாரோ விமான நிலையம் சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பூடான் பிரதமர் லோடேய் ஷெரீங் மற்றும் அமைச்சர்கள் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து, ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து பூடான் மன்னர் அரண்மனைக்கு சென்ற பிரதமருக்கு, வழி நெடுகிலும் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் இந்திய மூவர்ண கொடி மற்றும் பூடான் நாட்டுக் கொடிகளை அசைத்தபடி வரவேற்பளித்தனர்.
இந்த பயணத்தின் முதல் நாளான இன்று பூடான் மன்னரை பிரதமர் மோடி சந்திக்கிறார். நாளை, அங்குள்ள புத்த மடத்தில் நடக்கும் கலாசார நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அப்போது பல்கலைக்கழக மாணவர்களையும் சந்தித்து உரையாடுகிறார்.
பிரதமர் மோடியின் இந்த 2 நாள் பயணத்தின்போது, இரு நாடுகளிடையே கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. மேலும் அந்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள நீர்மின்சக்தி நிலையம் மற்றும் இஸ்ரோ அமைத்துள்ள ஆய்வுக்கூடத்தையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.
வாஜ்பாய் முதலாம் ஆண்டு நினைவு தினம் ; நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி