அத்திவரதர் தரிசனத்தால் உண்டியல் வரவு ரூ.7 கோடி கலெக்டர் தகவல்

by எஸ். எம். கணபதி, Aug 17, 2019, 14:01 PM IST

காஞ்சிபுரம் பெருமாள் கோயிலில் அத்திவரதரை ஒரு கோடியே 7500 பேர் தரிசனம் செய்துள்ளனர். கோயில் உண்டியல் மூலமாக ரூ.7 கோடி காணிக்கை கிடைத்துள்ளது என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்தார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலின் ஆதிமூலவரான அத்திவரதர் சிலை, அந்த கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில், ஒரு தனி நீரடிமண்டபத்தில் வைக்கப்பட்டு, 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பக்தர்களின் தரிசனத்திற்கு வெளியே எழுந்தருள செய்யப்படும்.

அத்திவரதர் காட்சி தரும் வைபவம் கடந்த ஜுலை 1ம் தேதி தொடங்கியது. 31 நாட்கள் சயனக்கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர், கடந்த 1ம் தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 47 நாட்களாக நடைபெற்று வந்த அத்திவரதர் தரிசனம் நேற்று(ஆக.16) நள்ளிரவில் நிறைவு பெற்றது. 47 நாட்களில் ஒரு கோடியே 7500 பேர் தரிசனம் செய்துள்ளனர். இன்றிரவு மீண்டும் அனந்தசரஸ் திருக்குளத்தில் வைக்கப்படும் அத்திவரதர், 40 ஆண்டுகளுக்கு பிறகு 2059-ல் தான் பக்தர்களுக்கு தரிசனம் தருவார்.

இந்நிலையில், காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா கூறுகையில், ‘‘இன்றிரவு வரதராஜ பெருமாள் கோயிலின் மூலவரை தரிசித்த பின்னர், அத்திவரதர் கோயில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் உள்ள மண்டபத்தில் வைக்கப்படுவார். குளத்திற்குள் யாரும் இறங்காமல் பாதுகாக்கப்படும். இதற்காக, குளத்தைச் சுற்றிலும் 2 மாதங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படும். மேலும், சி.சி.டி.வி. கேமராக்களும் குளத்தைச் சுற்றிலும் பொருத்தப்படும்.

காஞ்சிபுரம் நகருக்குள் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டு, சாலைகளும் 15 நாட்களுக்குள் சீரமைக்கப்படும். கோயில் உண்டியலில் பக்தர்கள் அளித்த காணிக்கையாக ரூ.7 கோடி பெறப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

அத்திவரதர் தரிசனம்; இன்று முடிவடைகிறது ஒரு கோடி பக்தர்கள் வழிபாடு


Leave a reply