கட்டணம் தேவையில்லை இன்ப அதிர்ச்சி கொடுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம்

metro rail authority today allowed passengers to travel free, due to problem in issuing tickets

by எஸ். எம். கணபதி, Aug 17, 2019, 17:53 PM IST

இன்று காலையில் திடீரென சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்காமல் இலவச பயணம் செய்ய அனுமதித்தனர். காரணம் என்ன தெரியுமா?
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று பலத்த மழை செய்தது.

சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் மழை இன்று காலை 10 மணிக்கு பின்பும் தொடர்ந்தது. இதனால், அரக்கோணம்- திருத்தணி- திருவள்ளூர் உள்ளிட்ட புறநகர் ரயில்கள் அனைத்தும் அரை மணி நேரம் தாமதமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்தன.

இந்த ரயில்களில் வருவோர் பலரும் சென்னையில் வேலை பார்ப்பவர்கள். அவர்கள் வழக்கமாக சென்ட்ரலில் இருந்து டவுன் பஸ்களை பிடித்து தங்கள் அலுவலகம் செல்வார்கள். இன்று காலை ரயில்கள் தாமதமாக வந்தவர்கள், அவசரமாகச் செல்வதற்காக மெட்ரோ ரயில் நிலையத்துக்குப் படையெடுத்தனர். டிக்கெட் கவுன்ட்டருக்குச் சென்ற பயணிகள், பணம் கொடுத்து டிக்கெட் கேட்டனர்.

``நீங்கள் இன்று இலவசமாக பயணிக்கலாம்" என்று மெட்ரோ ஊழியர்கள் டிக்கெட் கொடுக்காமல் உள்ளே அனுப்பினர். இதனால் பயணிகள் குஷியில் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். ஆனால், இந்த இலவசப் பயணம் மூன்று மணி நேரமே நீடித்தது.
இலவச பயணம் குறித்து பயணி ஒருவர் கூறுகையில், ``நான் தினந்தோறும் திருவள்ளூரில் இருந்து சென்னையில் உள்ள அலுவலகத்துக்கு வேலைக்கு வந்து செல்கிறேன். காலையில் மழை பெய்ததால், ரயில் தாமதமாக வந்தது. காலை 8.45 மணிக்கு திருவள்ளூரில் ரயில் ஏறிய நான் 10.25 மணிக்குத்தான் சென்னை சென்ட்ரலுக்கு வந்தேன். வழக்கமாக, சென்ட்ரலில் இருந்து அரசுப் பஸ்சில்தான் பயணம் செய்வேன். மெட்ரோ ரயிலில் போனால் சீக்கிரம் போய் விடலாம்.

ஆனால், அதில் டிக்கெட் 20 ரூபாய். ஆனால், பஸ்சில் 6 ரூபாய் கொடுத்து போய் விடுவேன். இன்று அலுவலகத்துக்குச் செல்ல நேரம் ஆகிவிட்டதால் 20 ரூபாய் கொடுத்தாலும் பரவாயில்லை என்ற முடிவில் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்தேன். டிக்கெட் எடுக்க சென்றபோது, அங்கிருந்த ஊழியர், ``இன்று இலவசமாக நீங்கள் பயணிக்கலாம்" என்று கூறினார். இதைக்கேட்டு குஷியில் ரயிலைப்பிடிக்க ஓடினேன். விரைவாக அலுவலகத்துக்கும் சென்றுவிட்டேன்" என்றார்.

திடீரென 3 மணி நேரம் இலவசம் பயணம் அறிவித்தது ஏன் என்பது குறித்து மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ``இன்று காலையில் கம்ப்யூட்டர் சர்வரில் கோளாறு ஏற்பட்டது. இதனால், விமான நிலையம், வண்ணாரப்பேட்டை, அரசினர் தோட்டம் ரயில் நிலையங்களில் டிக்கெட் விநியோகிக்க முடியவில்லை. உடனடியாக கோளாறை சரி செய்ய முடியவில்லை. பயணிகள் வரத்து அதிகமாக இருந்ததால் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று அறிவித்தோம். 3 மணி நேரத்துக்குப் பிறகு சர்வரில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டது. இதனால் இலவசப் பயணத்தை நிறுத்திவிட்டு பயணிகளுக்கு டிக்கெட் விநியோகித்தோம்" என்றார்.

You'r reading கட்டணம் தேவையில்லை இன்ப அதிர்ச்சி கொடுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை