ஊழல் நடவடிக்கைகளில் பாஜக அரசு இரட்டை வேடம்.. ஸ்டாலின் குற்றச்சாட்டு..

bjp down plays on the corruption of admk ministers : stalin

by எஸ். எம். கணபதி, Sep 25, 2019, 15:46 PM IST

முதலமைச்சரின் உறவினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து ரெய்டுகளை நடத்தி, பிறகு அவர்களை சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப வைக்கவும் மத்திய பா.ஜ.க. அரசு துணை போவது ஊழல் நடவடிக்கைகளில் அதன் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி பண பட்டுவாடா செய்ததாக தொடரப்பட்ட வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டுமென்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை வருமாறு :

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் 2 லட்சத்து 24, 145 வாக்காளர்களுக்கு, தலா 4000 ரூபாய் வீதம், 89.5 கோடி ரூபாய் பணம் பட்டுவாடா செய்ய வைத்திருந்த பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து வருமான வரித்துறை கைப்பற்றியது. இது தொடர்பான முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று அ.தி.மு.க. அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிவித்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்த இடைத்தேர்தலின் போது, மாவட்டத் தேர்தல் அதிகாரியாக இருந்த கார்த்திகேயன், இந்த எப்.ஐ.ஆர். ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யாமல் இருப்பதும், அதை மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியும், இந்தியத் தேர்தல் ஆணையமும் கை கோர்த்து ஏதோ உள் நோக்கத்துடன் வேடிக்கை பார்ப்பதும், நேர்மையான, சுதந்திரமான தேர்தலுக்கு மிகப்பெரிய நெருக்கடியையும், ஆபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 7.4.2017 அன்று அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து பணபட்டுவாடா பட்டியல் கைப்பற்றப்பட்டது. அப்போது சம்பந்தப்பட்டவர்கள் சுவர் ஏறிக் குதித்து தப்பியோடும் காட்சிகள் தொலைக்காட்சிகளில் வெளிவந்ததை பார்த்து தமிழக மக்கள் கை கொட்டிச் சிரித்தார்கள்.

மாநில அமைச்சர்கள் மூவர் அங்கே சென்று வருமான வரித்துறை அதிகாரிகளை மிரட்டும் காட்சிகளும் காட்டப்பட்டன. பரபரப்பு மிகுந்த இந்த வருமான வரித்துறை சோதனை குறித்த தகவல்கள் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டது. அதன் மீது, “முதலமைச்சர், அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்று தேர்தல் ஆணையம் 21.4.2017ல் மாநகர போலீஸ் கமிஷனருக்குக் கடிதம் எழுதியது.

ஆனால் அந்தப் புகார் வேண்டுமென்றே கிடப்பில் போடப்பட்டது. பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணா தலைமையிலான அமர்வு, சென்னை கிழக்குப் பகுதி இணை ஆணையரை இந்த வழக்கின் விசாரணையைக் கண்காணிக்கும் அதிகாரியாகவே நியமித்தது. ஆனால், சென்னை, அபிராமபுரம் காவல்நிலையத்தில் “மொட்டையாக” யார் பெயரும் இல்லாமல், ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அந்த முதல் தகவல் அறிக்கையையும் ரத்து செய்ய வேண்டும் என்று, வழக்கிற்கு சம்பந்தமே இல்லாத யாரோ பி.எம். நரசிம்மன் என்பவர், தனி நீதிபதியிடம் ஒரு வழக்கைத் தொடுத்து, பெருநகர மாஜிஸ்திரேட்டிடம் முன் அனுமதி பெற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டதையும் மறைத்து, முதல் தகவல் அறிக்கையை தனி நீதிபதி மூலம் ரத்து செய்ய வைத்தது அதிமுக அரசு. இதை மாவட்ட தேர்தல் அதிகாரியோ, உயர்நீதிமன்றத்தால் வழக்கை கண்காணிக்க நியமிக்கப்பட்ட இணை போலீஸ் கமிஷனரோ, மாநில தலைமை தேர்தல் அதிகாரியோ கண்டு கொள்ளவில்லை.

இந்நிலையில், நேற்றைய தினம் இந்த வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சத்தியநாராயணா, சேஷசாயி முன்பு வந்த போது, “எப்.ஐ.ஆரை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை” என்று அ.தி.மு.க. அரசு கூறியிருக்கிறது. “அந்த வழக்கு மேல்முறையீட்டுக்கு உகந்தது அல்ல” என்று அரசு சட்ட ஆலோசனை வழங்கியுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் கூறியிருக்கிறார். தேர்தல் காலத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை குறித்து நடவடிக்கை எடுக்க இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு முழு சுதந்திரமும் அதிகாரமும் இருந்தும், மாவட்ட தேர்தல் அதிகாரி திரு. கார்த்திகேயனின் சட்ட விரோதச் செயலைக் கண்டு கொள்ளாமல் இருப்பது கவலையளிக்கிறது.

ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருக்கும் கார்த்திகேயன், ஆளுங்கட்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சருக்குக் கட்டுப்பட்டு- தேர்தல் ஆணையத்தின் உத்தரவையே அவமதிப்பதும், வருமான வரித்துறை அதிகாரிகள் அளித்த அறிக்கையை உதாசீனப்படுத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது.

அ.தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரின் உறவினர்கள் ஆகியோர் மீது அடுத்தடுத்து பல வருமான வரித்துறை ரெய்டுகளை நடத்தி, பிறகு அந்த வழக்குகளை எல்லாம் இப்படி நீர்த்துப் போக வைக்கவும், அவர்களை சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப வைக்கவும் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு துணை போவது ஊழல் நடவடிக்கைகளில் மத்திய அரசின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது.

ஆகவே 89 கோடி ரூபாய் ஆர்.கே.நகர் பணப் பட்டுவாடா பட்டியல் கைப்பற்றப்பட்டது குறித்து முறையாக புகார் அளிக்காத தேர்தல் அதிகாரி, பெயர்களே இல்லாமல் எப்.ஐ.ஆர். போட்ட போலீஸ் அதிகாரி, உயர்நீதிமன்ற உத்தரவின்கீழ் முறையாக இந்த வழக்கினைக் கண்காணிக்காத அப்போதைய இணை போலீஸ் கமிஷனர், இதுவரை தனி நீதிபதியின் உத்தரவினை எதிர்த்து மேல்முறையீடு கூட செய்யாத மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகிய அனைவர் மீதும் இந்தியத் தேர்தல் ஆணையமே தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த வழக்கினை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்றும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரே உயர்நீதிமன்றத்தில் வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

You'r reading ஊழல் நடவடிக்கைகளில் பாஜக அரசு இரட்டை வேடம்.. ஸ்டாலின் குற்றச்சாட்டு.. Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை