ரயில்வேயை தனியாரிடம் விட்டால்
எவ்வளவு கட்டணம் உயரும்?
டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை..
ரயில்வே துறையை தனியார்மயமாக்க மாட்டோம் என்று அமைச்சர் பியூஸ் கோயல், நாடாளுமன்றத்தில் உத்தரவாதம் அளித்து 75 நாட்கள் கூட ஆகாத நிலையில் ரயில்களை தனியார்மயமாக்கத் துடிப்பது நியாயமா? என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தெற்கு ரயில்வே உள்ளிட்ட மொத்தம் 6 ரயில்வே மண்டலங்களின் தலைமை மேலாளர்களுக்கு இந்திய ரயில்வே வாரியம் கடந்த 23ம் தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் ரயில்வே தனியார்மயம் குறித்து கூறப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து மதுரை, கோவை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களுக்கு செல்லும் வழித்தடங்கள் உள்ளிட்ட 150 வழித்தடங்களை அடையாளம் கண்டுள்ள ரயில்வே வாரியம், அவற்றில் எந்தெந்த வழித்தடங்களில் தனியார் ரயில்களை இயக்க அனுமதிக்கலாம் என்பது குறித்த கருத்து தெரிவிக்கும்படி மண்டல ரயில்வே நிர்வாகங்களைக் கேட்டிருக்கிறது.
இதுகுறித்து இறுதி முடிவெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம், செப்.27 காலை 11 மணிக்கு டெல்லியில் நடைபெறும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி, பல ரயில் வழித்தடங்கள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது. ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் நலன் சார்ந்த கோணத்தில் பார்க்கும் போது இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இது இந்தியாவின் முக்கியமான போக்குவரத்து முறையை தலைகீழாகச் சிதைக்கும் நோக்கம் கொண்டதாகவே அமையும்.
தனியார் ரயில்கள் இயக்கப்பட்டால் அவற்றின் பயணக்கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படும். இப்போது வசூலிக்கப்படும் பயணிகள் கட்டணத்தில் சராசரியாக 47 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் ரூ.42,000 கோடி இழப்பை, சரக்குப் போக்குவரத்தில் கிடைக்கும் லாபத்திலிருந்து ரயில்வே துறை ஓரளவு சமாளிக்கிறது. தனியார் ரயில்கள் இயக்கப்படும் போது இந்த ரூ.42,000 கோடி இழப்பும் பயணிகள் தலையில் சுமத்தப்படும். இதற்காக ரயில் கட்டணம் 28 சதவீதம் முதல் 244 சதவீதம் வரை உயர்த்தப்படும். இந்த உயர்வை அடித்தட்டு மக்களால் தாங்க முடியாது.
அதுமட்டுமின்றி, நூற்றுக்கணக்கான ரயில்கள் தனியார்மயமாக்கப்படுவதால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை உருவாகும். இவை எதுவுமே ரயில்வே துறையின் வளர்ச்சிக்கோ, மக்களின் முன்னேற்றத்திற்கோ வழிவகுக்காது.
நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை 12ம் தேதி ரயில்வே துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பியூஷ் கோயல், ரயில்வே துறை ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது என்று உத்தரவாதம் அளித்திருந்தார். அவ்வாறு உத்தரவாதம் அளித்து 75 நாட்கள் கூட ஆகாத நிலையில் ரயில்களை தனியார்மயமாக்கத் துடிப்பது நியாயம் அல்ல.
ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு ரயில்களை தனியார்மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.