தமிழகத்தில் இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. அதிலும் திமுக 120 இடங்களுக்கும் மேற்பட்ட இடங்களை வென்று , தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. இதன்மூலம் திமுகவின் தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராவது உறுதியாகியுள்ளது. வாக்கு எண்ணிக்கையின், மாலை 6 மணி நிலவப்படி, வெற்றி + முன்னிலை என திமுக கூட்டணி 156 இடங்களை வசப்படுத்தும் நிலையில் இருந்தது.
இந்தக் கூட்டணியில் திமுக 124 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும் கைப்பற்றும் நிலையில் உள்ளன. மதிமுக 4, சிபிஎம் 2, சிபிஐ 2, விசிக 4, பிற கட்சிகள் 4 இடங்களில் வெல்லும் நிலையில் உள்ளன. இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ``6ஆவது முறையாக திமுக ஆட்சி செய்ய கட்டளையிட்டுள்ள தமிழக வாக்காளர்களுக்கு நன்றி. திமுகவின் மீது வீசப்பட்ட அவதூறுகளை வாக்குகளால் ஓரங்கட்டிய தமிழக மக்களுக்கு நன்றி. தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையாக இருப்பேன், உழைப்பேன்" என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, அதிமுக கூட்டணி 78 இடங்களில் வெற்றி + முன்னிலையில் இருக்கின்றன. அதிமுக 68 இடங்களையும், பாமக 5 இடங்களையும், பாஜக 4 இடங்களிலும் வெற்றி + முன்னிலையில் இருக்கின்றன.