தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான மனோபாவம் கொண்டவர் பிரதமர் நரேந்திர மோடி என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
எஸ்சி, எஸ்டி சட்டத்தில் நீதிமன்றம் திருத்தம் செய்யப்பட்டதற்கு டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், தலித் மற்றும் பழங்குடியினர் அமைப்பு சார்பில் போராட்டம் நடந்தது.
இதில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தாழ்த்தப்பட்ட மக்கள் நலனில் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு கவலையில்லை என குற்றம்சாட்டினார்.
‘ஒடுக்கப்பட்ட, பழங்குடியின மக்கள் நலனில் பிரதமருக்கு அக்கறையிருந்ததால், அவர்களுக்கு ஆதரவான கொள்கைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கும்.’
‘எஸ்சி,எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டம் போன்றவை என்னுடைய தந்தை ராஜீவ் காந்தி ஆட்சியில் இருக்கும் போது, அவர் பிரதமாக இருக்கும் போது கொண்டுவரப்பட்டது.’
‘ஆனால், அந்தச் சட்டங்களை எல்லாம் இப்போது நீர்த்துப்போகச் செய்ய பிரதமர் மோடி அனுமதிக்கிறார். எஸ்சி, எஸ்டி சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் விதமாக உத்தரவுகளைப் பிறப்பித்த உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு பதவிஉயர்வு அளிக்கப்பட்டுள்ளது.”
“எந்தெந்த மாநிலங்களில் எல்லாம் பாஜக ஆட்சியில் இருக்கிறதோ அங்கெல்லாம், தாழ்த்தப்பட்ட மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள். தலித்துகளுக்கு எதிரான சிந்தனையுடன் இருக்கும் மோடிக்கும், பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ்அமைப்புக்கும் எதிராக நாடே எழுந்து நிற்க வேண்டும்.” என பேசினார்.
இந்நிலையில், ராகுல் காந்தியின் கருத்துக்கு அமித் ஷா டுவிட்டரில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்த ராகுல் காந்தி அமித் ஷாவின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். இருவருக்குமான கருத்துமோதல் தொடர்கிறது.