2019-ல் கூட உள்ளாட்சி தேர்தல் நடக்காது போல.. நீதிமன்றம் அதிருப்தி

மாநில தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை பார்க்கும் போது, 2019-ஆம் ஆண்டில் கூட உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மாட்டார்கள் போல தெரிகிறது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

High Court- TN Election Commission

உள்ளாட்சி தேர்தலை 2017 நவம்பருக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சுந்தர் அடங்கிய அமர்வு விசாரித்தது, அப்போது, வார்டு மறுவரையறை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு தமிழக அரசு ஒப்புதல் பெற்று, அதன் பின் மூன்று மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் தெரிவித்தார்.

அத்துடன், வார்டு மறுவரையறை செய்யாமல் தேர்தலை நடத்த முடியாது என்றும், 1991-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தேர்தலை நடத்த அனுமதி அளிக்கும் சட்டப்பிரிவை அரசு ரத்து செய்துள்ளதால் தேர்தல் ஆணையத்தின் கைகள் கட்டி போடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்நிலையில், தமிழ் நாட்டில் தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் எந்த வார்டும் இல்லை என்றும் வார்டு மறுவரையறை செய்யாமல் உள்ளாட்சி தேர்தலை நடத்த கூடாது என்று திமுகதான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்துள்ளது என்றும் வாதிட்டார்.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், தேர்தல் ஆணையம் அறிக்கை அளித்த பின்னர் அரசு ஒப்புதல் அளிக்க எத்தனை நாட்கள் ஆகும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்த பின்னர்தான் ஒப்புதலுக்கான காலகெடுவை அரசால் நிர்ணயிக்க முடியும் என்றார்.

உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஏற்கெனவே போதுமான கால அவகாசம் வழங்கபட்டுள்ள நிலையில், 2019-ஆம் ஆண்டில் கூட தேர்தலை நடத்தி முடிக்க மாட்டீர்கள் போல தெரிகிறது என்று கூறி தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டுகளுக்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இந்த வழக்கு இன்றும் விசாரிக்கப்படுகின்றது.