சுதந்திர தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்தாதீர்கள் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தியாவின் 72வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது. இதற்காக நாட்டின் தலைநகரான டெல்லி உள்பட பல நகரங்களில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பயங்கரவாதிகளின் சதி நடக்கலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு பொது இடங்கள், கடைகளில் விற்பனை செய்யப்படும் பிளாஸ்டிக்கிலான தேசிய கொடியை வாங்காதீர்கள் என்று உள்துறை அமைச்சகம் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் 72வது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு பொது மக்கள் பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட தேசியக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம். அதற்கு பதில, காகிதம் அல்லது துணிகளால் ஆன தேசிய கொடிகளை உரிய மரியாதையுடன் பயன்படுத்தலாம் ” என குறிப்பிடப்பட்டிருந்தது.